மகாபாரதத்தை கொச்சைப்படுத்தியதாக கமல் மீது புகார்
15 மார்,2017 - 12:25 IST
மகாபாரதத்தை கொச்சைப்படுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் அரசியல், சினிமா, ஆன்மீகம், திராவிடம்... என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், கமல் மீது இந்து மக்கள் கட்சி சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. அதன் விபரம் வருமாறு...
சமீபகாலமாக நடிகர் கமல், கருத்து என்ற போர்வையில் இந்துக்களின் மீது தேவையில்லாத அநாகரீகமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் மகாபாரதத்தை மேற்கோள் காட்டி, ஒரு பெண்ணை வைத்து சூதாடியதை வைத்து படிக்கும் ஊர் என மகாபாரதத்தை கிண்டல் செய்தும், இதன் மூலம் இந்துக்களின் தெய்வநூலாக போற்றி வரும் மகாபாரதம் மற்றும் இதிகாசத்தை கொச்சைப்படுத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்துக்களின் மனதை கிண்டல் செய்து இந்திய இறையான்மைக்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும் கருத்து கூறி அமைதி பூங்காவான தமிழகத்தை கொந்தளிப்பை ஏற்படுத்தி அமைதிக்கு குந்தகம் விளைவித்து வரும் கமலை சட்ட விதிகளின் படி தண்டிக்க கேட்டு கொள்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற கருத்தை தெரிவித்து வரும் கமல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment