சாமி-2 கதை விவாதம் தொடங்கியது!
31 டிச,2016 - 07:56 IST
விக்ரமின் கேரியரில் ஹரி இயக்கத்தில் அவர் நடித்த சாமி முக்கியமான படம். அந்த படத்தில் ஆறுச்சாமி என்ற அதிரடி போலீசாக நடித்திருந்தார் விக்ரம். அதன்பிறகு சூர்யா நடிப்பில் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களில் அவரை போலீசாக வைத்தே இயக்கிவிட்டார் ஹரி. அதில் எஸ்-3 என்ற பெயரில் உருவாகியுள்ள சிங்கம்-3 படம் சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனபோதும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், சிங்கம்-3 படத்தில் நடிக்க சூர்யா வருவதற்காக தாமதமானதால் வருடக்கணக்கில் காத்திருந்து எஸ்-3 படத்தை இயக்கிய ஹரி, தனது அடுத்த படமான சாமி-2வை உடனடியாக தொடங்குகிறார். அதோடு ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பை தொடங்கி 2017ம் ஆண்டு இறுதியிலேயே சாமி-2 வை வெளியிடுகிறார். இந்த படத்தில் விக்ரம் நடிப்பது குறித்து இருமுகன் ஆடியோ விழாவிலேயே அறிவித்த ஹரி, தற்போது சாமி-2 படத்தின் கதை விவாதத்தில் இறங்கி விட்டார்.
மேலும், கெளதம்மேனனின் துருவநட்சத்திரம் படத்தில் நடிக்க தயாராகி விட்ட விக்ரம், அந்த படத்தில் நடித்து வரும்போது விஜயசந்தர் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். ஆனால் இந்த இரண்டு படங்களையுமே ஏப்ரல் மாதத்திற்குள் முடித்து விட்டு அதன்பிறகு சாமி-2 படத்தில் நடிக்கிறார்.
0 comments:
Post a Comment