Wednesday, December 28, 2016

மனதுக்கு பிடித்தவருக்காக காத்திருக்கிறேன்!: ஐஸ்வர்யா ராஜேஷ்


மனதுக்கு பிடித்தவருக்காக காத்திருக்கிறேன்!: ஐஸ்வர்யா ராஜேஷ்



28 டிச,2016 - 23:53 IST






எழுத்தின் அளவு:








தமிழ் சினிமாவில், இந்தாண்டு அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரர்,ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படம் கொடுத்த அடையாளத்தால், இப்போது, தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், ஹிந்தி மொழிகளிலும், மேடம் ரொம்ப பிசி. அவருடன் ஒரு சந்திப்பு:

இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருந்தது?

இந்தாண்டு, என் திரையுலக வாழ்க்கையில், ரொம்ப முக்கியமான ஆண்டாக இருந்தது. நான் நடித்த எந்த படமுமே, சோடை போகவில்லை. என் நடிப்பு நன்றாக இருந்ததாக, பலரும் பாராட்டினர்.

மற்ற மொழிகளிலும் நடிக்க துவங்கிட்டீங்களே?

காக்கா முட்டை படத்துக்கு தான், இந்த பெருமை சேரும். அந்த படத்தை பார்த்த மற்ற மொழி இயக்குனர்கள், எனக்கு வாய்ப்பு கொடுத்தனர். மலையாளத்தில், நிவின் பாலியுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். சத்யன் அந்திக்காடு படத்திலும் நடித்திருக்கிறேன். ஹிந்தியில், இயக்குனர் ஆஷ்யம் அலுவாலியா படத்தில் நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்களை இயக்குபவர்கள் எல்லாம், மிகப்பெரிய மனிதர்கள்; இது, எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்போது, அடுத்தகட்டத்துக்கு தயாராகி விட்டது போல் தெரிகிறதே?

அது, உண்மை தான். ஆனால், திரையுலகில் நிலைத்து நிற்க, இன்னும் மெனக்கெட வேண்டும்; நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

மொழி தெரியாமல் எப்படி மற்ற மொழிகளில் நடிக்கிறீர்கள்?

அது, ரொம்ப கஷ்டமான விஷயம் தான். ஆனால், வேறு வழியில்லை; எனக்கு கொடுக்கப்பட்ட கிடைத்த எல்லா வசனங்களையும் மனப்பாடம் செய்து நடிச்சிருக்கேன். விரைவில், மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

மோ படத்தில் உங்க ரோல்?

இந்த படத்தில், ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடிக்கிறேன். ஹீரோயினாக நடிப்பதற்காக போராடும் ஒரு பெண்ணை பற்றிய கதை. ஹீரோயின் ஆவதற்கு முன், ஒரு போராட்டம் இருக்குமே; அந்த போராட்டம் தான் கதை.

எதிர்காலத்தில் எப்படிப்பட்ட கதைகளில் நடிக்க ஆசை?

முன்னாடி எல்லாம், ஐஸ்வர்யா ராஜேஷ் என்றால் யாருக்கும் அவ்வளவாக தெரியாது; ஆனால், இப்போது என்னை ஓரளவு அடையாளம் தெரியுது. படத்தில், ஒருசில காட்சிகளில் நடித்தாலும், அதை எல்லாரும் பாராட்ட வேண்டும்; அப்படிப்பட்ட படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். கூட்டத்தில் ஒருத்தராக வந்து போகக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

சம்பளத்தை உயர்த்தீட்டீங்களாமே?

எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என, தயாரிப்பாளருக்கு தெரியும். அந்த அளவு தான், சம்பளம் வாங்குகிறேன். பணத்துக்காக மட்டும் படத்தில் நடிப்பது இல்லை. அப்படி நடித்திருந்தால், ஏராளமான படங்களில் நடித்து முடித்திருப்பேன்.

'நம்பர் ஒன்' இடத்துக்கு ஆசை இல்லையா?

கண்டிப்பாக ஆசை இருக்கு; கூடிய விரைவில், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்துக்கு வருவேன். இதை எல்லாரும் பார்க்கத் தான் போறீங்க.

உங்கள் திருமணம் எப்போது?


கண்டிப்பாக காதல் திருமணம் தான். மனசுக்கு பிடித்தவர் கிடைத்தால், உடனடியாக மேளம் கொட்ட வேண்டியது தான். ஆனால், இப்போதைக்கு சினிமாவில் தான், என் முழு கவனமும் உள்ளது.

0 comments:

Post a Comment