பெண்களுக்கான சவால்களை சீரியல்களில் காட்டுகிறார்கள்! -நடிகை சிவகாமி
30 டிச,2016 - 08:18 IST
ரோஜாக்கூட்டம், அத்திப்பூக்கள், முந்தானை முடிச்சு, மேகலா, பொன்னூஞ்சல், உறவுகள், வாணி ராணி என பல தொடர்களில் நடித்தவர் சிவகாமி. தற்போது கல்யாண பரிசு சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
பெரும்பாலும் சீரியல்களில் பாசிட்டிவ் வேடங்களில் நடித்து வந்த நான், முதல் தடவையாக கல்யாண பரிசு சீரியலில் கல்யாணி என்ற நெகடீல் ரோலில் நடித்து வருகிறேன். பாசிட்டிவ் வேடங்களை விட நெகடீவ் வேடங்களே மக்கள் மத்தியில் எளிதில் ரீச்சாகிறது. அவர்கள் மனதில் அழுத்தமாக பதிகிறது. மேலும், வில்லியாக நடிப்பது சாதாரண மான விசயமும் அல்ல. கதையை நகர்த்தும் வேடம். அதனால் கதாபாத்திரமாக மாறி நடித்து வருகிறேன். சில சமயங்களில் எக்ஸ்ட்ராவாக டயலாக் சேர்த்துக்கொண்டாலும் டைரக்டர்கள் கட்டுப்பாடு விதிப்பதில்லை. இந்த சீரியலில் எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறது.
ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்?
கல்யாணி கேரக்டரில் நான் வில்லியாக நடித்திருப்பதைப்பார்த்து விட்டு நேயர்கள் திட்டுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மாறாக சந்தோசப்படுகிறேன். காரணம் அதைத்தான் அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். யதார்த்தமான எனது வில்லி நடிப்பு அவர்களது மனதில் அந்த அளவுக்கு பதிந்துள்ளது. இந்த வில்லி வேடம் என் மனதுக்கு நிறைவாக உள்ளது. இந்த சீரியலில் பிசியாக இருப்பதால் புதிய சீரியல்களில் கமிட்டாகாமல் இருக்கிறேன்.
சினிமாவில் நடிக்கிறீர்களா?
பெண் சிங்கம் என்ற படத்தில்தான் முதன்முதலாக நடிகையானேன். அந்த படத்தில் விவேக்குடன் காமெடி ரோலில் நடித்தேன். அதன்பிறகு சீரியலுக்கு வந்து ரோஜாக்கூட்டம், அத்திப்பூக்கள், முந்தானை முடிச்சு, மேகலா, பொன்னூஞ்சல், உறவுகள் என சீரியல்களில் பிசியாகி விட்டேன். பின்னர் ஒரு 5 வருட இடைவெளிக்குப்பிறகு இப்போது மறுபடியும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
சீரியல்களில் சொல்லப்படும் கருத்துக்கள் பற்றி?
எல்லா சீரியல்களுமே குடும்பப் பிரச்சினைகளைப்பற்றியதாகத்தான் உள்ளது. பிரச்சினைகளில் சிக்கிக்கொள்பவர்கள் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை சொல்லும் வகையில்தான் உள்ளன. ஒவ்வொரு பிரச்சினைகளுக்குமே ஒரு தீர்வு இருக்கும். சில சீரியல்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடியதாகவும் உள்ளன.சமீபகாலமாக தமிழ் சேனல்களில் வெளியாகும் இந்தி சீரியல்களைப்பற்றி சொல்லவேண்டுமென்றால், மேலோட்டமான காதல் கதைகளும், ஆழ்ந்த வில்லத் தனத்தையும்தான் காட்டுகிறது. நடக்காத விசயத்தை நடக்கிற மாதிரியும்தான் இருக்கும். ஆனால் தமிழ் சீரியல்களைப்பொறுத்தமட்டில் நம்மைச்சுற்றி என்னென்ன விசயங்கள் நடக்கிறதோ அதைதான் யதார்த்தமாக சொல்கிறார்கள். குடும்பத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் பொறுமை அப்படின்னா என்ன என்பதை தமிழ் சீரியல்களைப்பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
சீரியல்களில் வரம்பு மீறப்படுகிறதே?
எனக்கு தெரிந்து ரொமான்ஸ் என்பது லிமிட்டோடு இருப்பதாகத்தான் தெரிகிறது. அதோடு, பெண்களுக்கான சவால்களைத்தான் சீரியல்களில் அதிகமாக காட்டுகிறார்கள். அதோடு பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்கிற விழிப்புணர்வை பெண்களுக்கு கொடுக்கும் கதைகளும் நிறைய வருகின்றன. என்றாலும், முழுக்க முழுக்க அந்த மாதிரி கதைகள் வந்துள்ளதா என்று தெரியவில்லை. மேலும் தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை குறைக்கலாம்.
உங்களது ரோல் மாடல்?
மனோரமா ஆச்சிதான் எனது ரோல் மாடல். அவங்க அளவுக்கு சாதிக்க முடியாது. ஆனால் அவர்கள் கால் தூசு அளவுக்காவது ஒரு பெயர் எடுக்கனும். அவர் செண்டிமென்ட், காமெடி, பின்னணி பாடுவது என அனைத்தும் கைதேர்ந்தவர். ஒவ்வொரு அசைவிலும் ஒரு நடிப்பு காட்டுவார். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியாக நடிப்பார். மனோரமாவை மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் இனிமேல் பார்க்க முடியாது.
சீரியல் நேயர்களின் ரசணை மாறி விட்டதாக கூறப்படுகிறதே?
செண்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ் என எல்லாம் கலந்த ஒரு கதம்பம்தான் சீரியல்கள். காமெடி என்பது மக்களை மகிழ்ச்சிப்படுத்தும். சீரியல்களில் வரும் காமெடியைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அதனால் காமெடி காட்சிகளை சீரியல்களில் அதிகமாக இடம்பெறச்செய்யலாம் என்பது எனது கருத்து என்கிறார் சிவகாமி.
0 comments:
Post a Comment