நடிகைகள் என்ன பணத்திற்காக ஆடையை அவிழ்ப்பவர்களா....? சுராஜிற்கு நயன்தாரா பதிலடி!
26 டிச,2016 - 17:52 IST
நடிகைகள் பற்றி சுராஜ் பேசிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது, அவருக்கு நயன்தாரா காட்டமாக ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அது என்ன என்று பார்ப்போம்... சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலரது நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள படம் ‛கத்தி சண்டை'. இப்படத்தில் நடிகை தமன்னா கொஞ்சம் கிளாமராக வருகிறார்.
இந்நிலையில், கத்தி சண்டை படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அப்படத்தின் இயக்குநர் சுராஜ் அளித்துள்ள பேட்டியில், நடிகைகளின் ஆடை விஷயம் பற்றி பேசியிருக்கிறார். அதில், ”என் படங்களில் ஹீரோயின்களுக்கு கிளாமராகதான் காஸ்டியூம் கொடுப்பேன். என்னை போன்ற லோ கிளாஸ் ஆடியன்ஸ் படம்பார்க்க வரும்போது ஹீரோயின்களை இப்படித்தான் பார்க்க விரும்புவார்கள், காஸ்டியும் டிசைனர் நடிகைகளின் மொட்டிக்கு கீழ் உடையை கொண்டு வந்தால் அதை கொஞ்சம் வெட்டு என்று கூறிவிடுவேன், நடிகைகள் ஒன்றும் சும்மா நடிக்கவில்லை, ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள், சும்மா நடிக்க சொல் என்பேன். கிளாமராக செய்பவர்கள்தான் இன்று பெரிய நாயகியாக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
சுராஜின் இந்த பேச்சுக்கு நடிகை நயன்தாரா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது... ‛‛சுராஜ் நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். திரைத்துறையை சேர்ந்த ஒரு பொறுப்புள்ள நபர் எப்படி இவ்வாறான கீழ்த்தரமான கருத்தை சொல்லலாம். பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக நடிகைகள் என்ன ஆடையை அவிழ்ப்பவர்களா...?, தன் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி கூறுவாரா...?, 'பிங்க்', தங்கல்' போன்ற திரைப்படங்கள் பெண்கள் அதிகாரத்தையும், பெண்களுக்கான மரியாதையையும் கொடுக்கும் இந்தக்காலத்தில் சுராஜின் இந்த பேச்சு ஏற்புடையதல்ல. கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் நடிகைகள் கவர்ச்சியான உடைககளை அணிகிறார்கள். நானும் கவர்ச்சியாக நடித்துள்ளேன், ரசிகர்களின் திருப்திப்படுத்த அப்படி நடிக்கவில்லை, கதைக்கு தேவை என்றால் மட்டுமே நடிப்பேன். மேலும் நடிகைகள் என்றால் இப்படித்தான் என்று நினைக்க யாருக்கும் உரிமை கிடையாது''.
இவ்வாறு நயன்தாரா கோபமாக கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment