தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஐந்து முனை போட்டி
27 டிச,2016 - 10:27 IST
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 5 அணிகள் போட்டியிடும் என்று தெரிகிறது. டி.ராஜேந்தர் தலைமையில் போட்டியிடும் அணியில் அவர் தலைவர் பதவிக்கு நிற்கிறார். கேயார் பொதுச் செயலாளர் அணிக்கு நிற்கிறார். துணை தலைவர்களாக ஏ.எம்.ரத்னம், ஏ.எல் அழகப்பன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
இன்னொரு அணியாக நடிகர் சங்கம் களம் இறங்குகிறது. இதில் தலைவர் பதவிக்கு நாசரின் மனைவி கமீலா நாசர் போட்டியிடுவார் என்று தெரிகிறது. விஷால் துணை தலைவர் பதவிக்கும், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
மூன்றாவது அணியாக தற்போது தலைராக உள்ள கலைப்புலி எஸ்.தாணு அணி போட்டியிடும். தாணு தேர்தலில் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக தற்போது துணை தலைவரக இருக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன், அல்லது பொருளாளராக இருக்கும் சத்யஜோதி தியாகராஜன் ஆகியோர் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
நான்காவது அணி ராதிகா சரத்குமார் தலைமையில் களம் இறங்க வாய்ப்புள்ளது. சரத்குமார், அல்லது ராதிகா தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். ஜே.கே.ரித்தீஷ் பொதுச்செயலாளர் பதவிக்கும், ராதாரவி செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
5வது அணியாக தற்போதைய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போட்டியிடலாம். சிறு தயாரிப்பாளர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் அவர் தனி அணியாக போட்டியிடலாம். அல்லது கடைசி நேரத்தில் விஷால் அணியுடன் கூட்டு சேரலாம்.
இவை அனைத்தும் உறுதி செய்யப்படாத அணிகள். கடைசி நேரத்தில் மாறுதல்கள் ஏற்படலாம். இரு அணிகள் சேர்ந்து ஒரே அணியாகலாம். இப்போது அணி சேர்க்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த தேர்தலைப்போல இந்த தேர்தலிலும் ஓய்வுபெற்ற நீதிபதி தேர்தல் அதிகாரியாக இருப்பார். நடிகர் சங்க தேர்தலை போன்று இதுவும் பரபரப்பாக இருக்கும் என தெரிகிறது.
0 comments:
Post a Comment