‘பாகுபலி-2’ படம் அதிரடி சாதனை படைத்துள்ளது.
நடிகர்கள் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், நடிகைகள் ரம்யாகிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா நடித்த ‘பாகுபலி-2’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
இது பாகுபலி-1 படத்தின் தொடர்ச்சி என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இதனால் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். நேற்று படம் வெளியான தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.
உலகம் முழுவதும் வெளியானாலும் ஆந்திராவில் பிரபாஸ், ராணா ரசிகர்கள் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தனர். சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் நடித்ததால் தமிழ்நாட்டிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் கதாநாயகன் பிரபாஸ் என்றாலும் சத்யராஜ் படம் போல் ஆரம்பம் முதல் இறுதிவரை இடம் பெற்றுள்ளார்.
`பாகுபலி’ முதல் பாகத்தில் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்’ என்ப தற்கு `பாகுபலி 2′-ல் விடை கிடைக்கும் என படம் முடிவடைந்ததால் 2-ம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
வெளிநாடுகளுக்கு இணையான ‘கிராபிக்ஸ்’ தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டதால் 2 ஆண்டுகளாக படம் தயாரிப்பில் இருந்தது. இதனால் ரசிகர்கள் 2 வருடம் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஆங்கில படம் பார்ப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.
உலகம் முழுவதும் 9,000 தியேட்டர்களில் பாகுபலி-2 ரிலீஸ் ஆனது. முதல் நாளில் மட்டும் இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
`பாகுபலி-2′ படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 3 மொழிகளில் வெளியாகியுள்ளது. இதில் இந்தியில் மட்டும் முதல் நாளில் ரூ.40 கோடிக்கு வசூலாகி உள்ளது. இவை அனைத்துமே ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனையான டிக்கெட் வசூல் ஆகும். ஆன்லைனில் முதல்நாளில் ஒரு வினாடிக்கு 12 டிக்கெட்டுகள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 650 தியேட்டர்களில் பாகுபலி-2 ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் முதல்நாளில் ரூ.13 கோடி வசூலாகி உள்ளது. கேரளாவில் 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி முதல்நாளில் ரூ.5 கோடி வசூலித்து கொடுத்துள்ளது.
மலையாளம் அல்லாத பிற மொழிப்படம் கேரளாவில் ஒரே நாளில் ரூ.5 கோடி வசூலித்து இருப்பது புதிய சாதனையாகும்.
ஆந்திராவில் `பாகுபலி-2′ படம் பார்க்க காலை 6 மணிக்கே ரசிகர்கள் கூட்டம் கூடியது. ஐதராபாத்தில் ஆன்லைன் முன்புதிவு தொடங்கியதும் ரசிகர்கள் அனைவரும் செல்போன்களில் டிக்கெட்டுகளை போட்டி போட்டு முன்பதிவு செய்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் 1000 தியேட்டர்களில் `பாகுபலி’ ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாளில் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை வசூலானது.
கர்நாடகத்தில் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. பெங்களூரில் 95 சதவீத தியேட்டர்களில் `பாகுபலி-2′ படம் ஓடியது. இங்கு தெலுங்கு மொழியில் படம் வெளியானது.
பெங்களூர், மும்பையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.1000, ரூ.1,500, ரூ.2,000 என ரகசியமாக விற்கப்பட்டது.
வெளிநாடுகளில் 1000 தியேட்டர்களில் `பாகுபலி-2′ படம் ரிலீஸ் ஆனது. நாளை வரை 3 நாளில் மொத்தம் ரூ.240 கோடி வரை முன்பதிவு மூலம் வசூலாகி உள்ளது.
0 comments:
Post a Comment