சபரிமலையில் ஆகம விதிகளை மீறிய ஜெயராம்
26 ஏப்,2017 - 12:59 IST
நடிகர் ஜெயராம் நடிகர் என்பதோடு சிறந்த பக்திமான், செண்ட மேள கலைஞர். ஆனால் அவர் சபரிமலையில் ஆகம விதிகளை மீறியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கேரள சினிமா உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலையில் கடந்த 10ந் தேதி பங்குனி உத்திர பூஜை நடந்தது. இதில் கேரள தொழில் அதிபர் ஒருவரின் குடும்பத்தினருடன் இணைந்து நடிகர் ஜெயராமும் கலந்து கொண்டார். தொழில் அதிபர் குடும்பத்தில் இளம் பெண்கள் இருந்ததாவும், நடிகர் ஜெயராம் தேவசம்போர்டு இசை கலைஞர்கள் பயன்படுத்தும் இடக்கா என்ற இசை கருவியை வாசித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இடக்கா இசைக் கருவி ஐயப்பனுக்கு மட்டுமே உள்ள பிரத்யோக இசை கருவி. இதனை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு இசை கலைஞர்கள் மட்டுமே வாசிக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில்தான் வாசிக்க வேண்டும் என்பது ஆகம விதி. அதை ஜெயராம் மீறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கேரள அரசு உத்தரவிட்டது. விசாரணையில், பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் என்றும், ஜெயராம் இடக்கா இசை கருவியை வாசித்தது ஆகம விதிகளை மீறிய செயல் என்றும் அறிக்கை சமர்பித்தது. இதனால் ஜெயராமை இடக்கா இசைக்க அனுமதித்த தேவசம் போர்டு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
"ஜெயராம் ஒரு இசை கலைஞர். இசை ஆர்வத்தினாலேயே அவர் இடக்கா இசை கருவியை வாசித்தார். அது ஆகம விதிமீறல் என்பது அவருக்கு தெரியாது. யாரும் சொல்லவும் இல்லை. தெரிந்திருந்தால் ஆகம விதிமுறைகளை உயிருக்கும் மேலாக மதிக்கிற அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார்" என்று ஜெயராம் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment