7 View | Published by: Rajesh G on April 28, 2017
நடிகர்கள் : பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், ரோகினி மற்றும் பலர்.
இயக்கம் : ராஜமௌலி
இசை : எம் எம் கீரவாணி
ஒளிப்பதிவாளர் : கே கே செந்தில்குமார்
எடிட்டர்: கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ்
தயாரிப்பு : அர்க்கா மீடியா ஒர்க்ஸ்
கதைக்களம்…
முதல் பாகத்தின் கதை தங்களுக்கு தெரியும்தானே. இதில் அதன் ப்ளாஷ்பேக் காட்சிகளும், அதன்பின்னர் சில தற்போதைய காட்சிளும் உள்ளன.
பாகுபலிக்கு முடி சூட்ட விரும்புகிறார் ராணி சிவகாமி. அதே சமயம் அவருக்கு ஒரு நல்ல மணமகளையும் பார்க்க விரும்புகிறார்.
இதனிடையில் பாகுபலி மற்றும் கட்டப்பாவை ஊருக்குள் சென்று நாட்டில் மக்களின் நிலையை அறிந்து வர செல்கிறார்.
அப்போது மற்றொரு அரச வம்சத்தின் இளவரசி தேவசேனா (அனுஷ்கா) மீது காதல் கொள்கிறார் பிரபாஸ்.
ஆனால் தன்னை யார்? என்று அவரிடம் காட்டிக் கொள்ளவில்லை. பின்னர் அனுஷ்காவும் காதலிக்கிறார்.
இதனிடையில், அனுஷ்காவின் ஓவியம் பார்த்து காதல் கொள்கிறார் ராணா. எனவே அனுஷ்காவை ராணாவுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
இதன்பின்னர் பிரபாஸின் காதல் தெரிய வர, என்ன செய்தார் மகாராணி? என்பதும் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதையும் தன் உச்சக்கட்ட விஷ்வல் ட்ரீட் கொடுத்து, ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் ராஜமவுலி.
கேரக்டர்கள்…
பாகுபலியை மட்டுமல்ல தன்னையே இயக்குனரிடம் ஒப்படைத்துவிட்டார் பிரபாஸ்.
சில காட்சிகளில் மரத்தை பிடுங்குவது, தேரை இழுப்பது என்பது போல இருந்தாலும், அதை பிரபாஸ் செய்வதால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.
அத்தனை பலத்துடன் வெறி கொண்டு நடித்திருக்கிறார் பிரபாஸ்.
அனுஷ்கா மீது காதல் கொள்ளும் போதும், கோழையாக நடிக்கும்போதும் இளம் பெண்களை கொள்ளை கொள்வார்.
மகாராணியின் கட்டளையை மீறும்போது அது சரிதான் என்று ரசிகர்கள் சொல்லுமளவுக்கு ரசிக்க வைக்கிறார் பிரபாஸ்.
பிரபாஸைவிட நான் சளைத்தவன் இல்லை என்னுமளவுக்கு ராணாவும் ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார்.
இருவரும் மோதும் சண்டை காட்சிகளை பார்க்கும்போது, இனி தமிழ் சினிமாவில் இதுபோல் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். அப்படியொரு கம்பீரம். ரசிகர்களிடையே ஆரவாரம்.
கட்டப்பா சத்யராஜ், இதில் காமெடியும் செய்து ரசிக்க வைக்கிறார். பாசத்திற்கும் ராஜ தந்திரத்திற்கும் நடுவில் இவர் சிக்கிக் கொண்டு நடிக்கும் காட்சிகள், தன் சினிமா அனுபவத்தை பயன்படுத்தியுள்ளார்.
இவர்களுக்கு போட்டியாக மகாராணி ரம்யா கிருஷ்ணன், இளவரசி அனுஷ்கா.
மகாராணி கேரக்டருக்கு ரம்யா கிருஷ்ணனை விட பொருத்தமான ஆள் கிடைப்பாரா? எனத் தெரியவில்லை. சிவகாமி சிக்ஸர் அடிக்கிறார்.
உண்மை என்னவென்று தெரியாமல் கட்டளையிட்டுவிட்டு அதன் பின் தவிக்கும் காட்சிகளில் தாயின் உணர்வை பிரதிபலிக்கிறார்.
இளவரசியாக ஜொலிக்கிறார் அனுஷ்கா. அழகிலும் அடிதடியிலும் அசத்துகிறார். வாள் வீச்சிலும் விழி வீச்சிலும் ஸ்கோர் செய்கிறார்.
நயவஞ்சகர் நாசர் என்னும் திட்டுமளவுக்கு தன் கேரக்டரை உயர்த்திருக்கிறார்.
முதல் பாகத்தில் தமன்னாவின் காதல் இருந்தது. ஆனால் இதில் தமன்னாவே இல்லை என்னுமளவிற்கு ஓரிரு காட்சிகளில் வருகிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
மதன்கார்க்கியின் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். அரசர் காலத்து கதையிலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.
செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்தை இன்னும் பலமுறை பார்க்க வைக்கும்.
கலை இயக்குனரே படத்தின் ஆணிவேர் எனலாம். ஒரு பாடல் காட்சியில் அந்த பறக்கும் கப்பல் ஆச்சயரிமூட்டும்.
யானை அணிகலன் ஆகட்டும், கிராம மக்கள் ஆகட்டும், போர்க்களம் ஆகட்டும், அரண்மனை ஆகட்டும் எதுவாக இருந்தாலும் நிஜம் எது? கிராபிக்ஸ் எது? தெரியாத அளவுக்கு நம்மை ஈர்க்க வைக்கிறார்.
படத்தின் பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். இளையராஜா போன்றோரை பயன்படுத்தியிருந்தால் பாடல்களையும் ரசிகர்கள் ரசித்திருப்பார்கள்.
இயக்கம் பற்றிய அலசல்…
சரித்திர கால கதையை எந்தவித சலிப்பும் இல்லாமல் கொண்டு செல்கிறார் டைரக்டர்.
முதல் பார்ட்டில் போர்களம், வீரம் என அதிரடிகளை கொடுத்தவர், இதில் காதல், குடும்பம், ராஜ தந்திரம், ஆட்சி, சூழ்ச்சி என அத்தனையும் ட்விஸ்ட் கலந்து கொடுத்திருக்கிறார்.
பாகுபலியை கட்டப்பா ஏன் கொல்கிறார்? என்பதையும் ஏற்றுக் கொள்ளும்படி கொடுத்திருக்கிறார்.
தியேட்டரில் சென்று பாகுபலியை பார்த்தால் உங்களுக்கு பாக்கியம் என்றே சொல்லலாம்.
நவீன தொழில்நுட்பம், சயின்ஸ்பிக்சன் என மற்ற கதைகளை ஹாலிவுட்டில் எடுக்கலாம். ஆனால் நம் சரித்திர காலத்தை இந்த மண்ணில் பிறந்தவரால் மட்டுமே எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார் ராஜமௌலி.
பாகுபலி… பாக்ஸ் ஆபிஸில் ஒரு கதகளி
Tags:
Baahubali, Baahubali 2 aka Bahubali 2 rating, Baahubali 2 aka Bahubali 2 review, Baahubali Kattappa, Bahubali Prabhas, பாகுபலி 2 திரை விமர்சனம், பாகுபலி 2 படம் எப்படி, பாகுபலி 2 விமர்சனம், பாகுபலி கட்டப்பா, பாகுபலி2 ராஜமவுலி பிரபாஸ், பாகுபலி2 விமர்சனம்
0 comments:
Post a Comment