இயக்குநர் மதுர் பண்டார்கரை கொல்ல முயற்சி : மாடல் அழகிக்கு 3 ஆண்டு சிறை
29 ஏப்,2017 - 10:00 IST
ஹிந்தி திரைப்பட இயக்குனர் மதுர் பண்டார்கரை கொலை செய்ய முயன்ற வழக்கில், மாடல் அழகிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மஹாராஷ்டிராவில், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்தவர் மதுர் பண்டார்கர், 46.
டிராபிக் சிக்னல், ஹீரோயின், பேஷன் என, பல படங்களை இயக்கியுள்ளார். மும்பையை சேர்ந்தவர் பிரீத்தி ஜெயின், மாடல் அழகி. 2004ல், போலீசில் பிரீத்தி கொடுத்த புகாரில், தனது படத்தில், எனக்கு, கதாநாயகி வாய்ப்பு தருவதாக, இயக்குனர் பண்டார்கர் உறுதியளித்தார். இதை நானும் நம்பினேன். இதையடுத்து, என்னுடன் அவர் பல முறை உடலுறவு கொண்டார். நான் மறுத்த போதும், என்னை பலாத்காரம் செய்தார். ஆனால், கதாநாயகி வாய்ப்பு தரவில்லை, என கூறியிருந்தார்.
இந்த புகார்களை, கோர்ட் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், கூலிப்படையாட்கள் மூலம், இயக்குனர் மதுர் பண்டார்கரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, பிரீத்தியை, 2005ல் மும்பை போலீசார், கைது செய்தனர். பின், ஜாமினில், பிரீத்தி வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை, மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பிரீத்தி ஜெயினுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.
0 comments:
Post a Comment