Tuesday, April 25, 2017

'பாகுபலி 2'க்கு 'பைரவா' தோல்வி தந்த சிக்கல்


'பாகுபலி 2'க்கு 'பைரவா' தோல்வி தந்த சிக்கல்



25 ஏப்,2017 - 18:00 IST






எழுத்தின் அளவு:








'பாகுபலி 2' படத்தின் தமிழ்நாடு வெளியீடு நேற்று வரை கடும் சிக்கலை சந்தித்திருக்கிறது. படம் வெளிவர இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படம் தமிழ்நாட்டில் வெளியாகுமா, ஆகாதா என்ற சந்தேகம் திரையுலகத்தில் பலருக்கும் எழுந்தது. அதற்குக் காரணம் 'பைரவா' படத்தின் தோல்விதான் என்ற தகவல் வெளியானதிலிருந்து விஜய்யை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

'பாகுபலி'யையே மிரள வைத்த 'பைரவா' என்ற ரீதியில் பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. 'பைரவா' படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டு உரிமையை வாங்கி வெளியிட்டது. அந்தப்படம் ஏற்படுத்திய நஷ்டம், ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடித்த 'போகன்' படம் ஏற்படுத்திய நஷ்டம், சிபிராஜ் நடித்த 'கட்டப்பாவ காணோம்' படம் ஏற்படுத்திய நஷ்டம் என ஸ்ரீகிரீன் வாங்கி வெளியிட்ட படங்கள் அவர்களுக்கு நஷ்டத்தைக் கொடுத்ததால் 'பாகுபலி 2' படத்தின் தமிழ்நாட்டு உரிமையை 47 கோடி கொடுத்து வாங்கியதில் சுமார் 17 கோடி ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளார்கள்.

மீதி 17 கோடி ரூபாயைத் தர முடியாத நிலையில், ஏற்கெனவே 'பாகுபலி 2' படத்தை வெளியிட வினியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்றால் வாங்கிய முன்பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும். அதுவும் முடியாத நிலையில் தற்போது படத்தின் தமிழ்நாட்டு உரிமையை முதலில் வாங்கிய கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமே திரும்ப வாங்கி வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எப்படியும் பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும் என்கிறார்கள்.

'பாகுபலி 2' படத்தின் இந்த சிக்கலுக்கு காரணமே 'பைரவா' படத்தின் அதிகப்படியான நஷ்டம் என 'விஜய் ஹேட்டர்கள்' சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


0 comments:

Post a Comment