இயக்குநராகவும் ஜெயித்த தனுஷ்
13 ஏப்,2017 - 13:49 IST
நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக வெற்றி பெற்ற தனுஷ், இப்போது இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் 2002ம் ஆண்டு நாயகனாக அறிமுகமானவர் தனுஷ். தொடர்ந்து கடந்த 15 வருடங்களில் தமிழ், ஹிந்தி என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராக என தன்னுடைய திறமைகளை சமீபகாலமாக வெளிப்படுத்தினார். தற்போது தனுஷ் ப.பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் ஆகியோருடன் தனுஷ் மற்றும் மடோனா செபாஸ்டியனும் ஒரு முக்கியத்துவம் வாயந்த் ரோலில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ப.பாண்டி படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் தனுஷ், இயக்குநராகவும் பாஸாகிவிட்டார். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இப்படம் உருவாகியுள்ளது. ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை யதார்த்தம் மீறாமல் படத்திற்கு என்ன தேவையோ அதை அவ்வளவு நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் தனுஷ். வலிய திணிக்கப்பட்ட காட்சிகள் என்று எதுவும் இல்லாமல் ஒரு வயதானவரின் வாழ்க்கை போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நாயகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியவர்களில் கமல்ஹாசன், அர்ஜுன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே. ஆனால் இவர்கள் எல்லாம் தங்களையே நாயகர்களாக வைத்துதான் படங்களை இயக்கியுள்ளார்கள். ஆனால், தனுஷ் ப.பாண்டி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மட்டும் நடித்து, ராஜ்கிரணை பிரதான நாயகனாக நடிக்க வைத்திருக்கிறார். இதிலிருந்தே அவருடைய கதையின் மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
0 comments:
Post a Comment