உலக சாதனை படைத்த பிரேம் நசீர்
16 ஏப்,2017 - 11:57 IST
உலக சினிமா வரலாற்றில் பிரேம் நசிர் படைத்த சாதனைகளை இதுவரை எவரும் முறியடித்ததில்லை. இனியும் யாராலும் முடியாது என்றே கூறப்படுகிறது. மலையாள சினிமா உலவின் மன்னனாக கருதப்படும் பிரேம் நசீரின் இயற்பெயர் அப்துல் காதர். கல்லூரியில் படிக்கும்போது மாநில அளவில் நடந்த நாடகப்போட்டியில் முதல் பரிசு பெற்றதன் மூலம் சினிமா உலகத்தின் கவனத்தைப் பெற்று விசப்பின்ட விளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1957ல் தொடங்கிய இவரது திரைப்பயணத்தில் சுமார் 700 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் இருளுக்கு பின், நான் வளர்த்த தங்கை, தை பிறந்தால் வழி பிறக்கும், பிறந்த நாள், முரடன் முத்து, உலகம் சிரிக்கிறது, கோவில், வண்ணக்கிளி படங்களில் நடித்தார்.
நடிகை ஷீலாவும், பிரேம் நசீரும் 130 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். 1979ல் ஒரே ஆண்டில் மட்டும் 30 படங்களில் நடித்தார். 80 ஹீரோயின்கள் பிரேம் நசீருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். 33 படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 35 ஆண்டுகள் மலையாள சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த் பிரேம் நசீரை நித்ய ஹரித நாயகன், நித்ய வசந்தம் என்று மலையாள ரசிகர்கள் கொண்டாடினார்கள். முதல் படத்தில் இருந்த தோற்றம் போன்றே கடைசி படத்திலும் தோன்றினார். யாராலும் நெருங்க முடியாத சாதனைகளை படைத்த பிரேம் நசீர் தனது 60வது வயதிலேயே காலமானார். அவரது பல சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தகததில் இடம்பெற்றுள்ளது.
Advertisement
0 comments:
Post a Comment