தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை - ரஜினி அறிவிப்பு
23 மார்,2017 - 10:23 IST
நடைபெற உள்ள ஆர்கே., நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. ஆளும் அதிமுக., கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் அந்தக்கட்சி சரியான தலைமை இன்றி தவிக்கிறது. சசிகலா அணி, ஓபிஎஸ்., அணி என இரு அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவவ்போது குரல்கள் ஓங்கி ஒலிக்கும். குறிப்பாக தேர்தல் சமயத்தில் அவர் வருவாரா...? என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கும். ஆனால் 20 வருடங்கள் ஓடிவிட்டது, அவரும் அரசியலுக்கு வந்தபாடில்லை. தமிழகத்தில் நிலவும் தற்போதைய சூழலில் அவர் அரசியலுக்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போதும் அவர் மவுனமாகத்தான் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஜெயலலிதா மறைந்த தொகுதியான ஆர்கே., நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சசிகலா அணி, ஓபிஎஸ்., அணி, திமுக., பா.ஜ., உள்ளிட்ட அணிகள் களம் காண்கின்றனர். இருதினங்களுக்கு முன்னர் ஆர்கே., நகரில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன், ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஆர்கே., நகர் தேர்தல் குறித்தும், தனக்கு ஆதரவு வேண்டியும் கங்கை அமரன், ரஜினியிடம் பேசியதாக கூறப்பட்டது. ரஜினி, பா.ஜ., கட்சியின் அனுதாபியாக இருப்பது ஊரறிந்த விஷயம். இதனால் ரஜினியின் ஆதரவு, பா.ஜ., கட்சி வேட்பாளரான கங்கை அமரனுக்கு கிடைத்தாக ஒரு தவகல் பரவியது. ஆனால் தான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று ரஜினி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ரஜினி, தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛வருகின்ற தேர்தலில் நான் யாரையும் ஆதரிக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment