அஜித் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!
13 ஏப்,2017 - 11:35 IST
ரஜினியை நீண்டகாலமாகவே அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் இப்போதுவரை அவர் பிடிகொடுக்காமலேயே இருந்து வருகிறார். யாராவது அரசியல்வாதிகள் மரியாதை நிமித்தமாக தன்னை சந்தித்தால்கூட அதை அரசியலாக்கி விடுவார்களோ, அல்லது தன்னுடனான சந்திப்பில் அரசியல் லாபம் தேடிக்கொள்வார்களோ என்ற பயத்தில் அந்த சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை என்பது போல் அடுத்தபடியாக செய்தி வெளியிடுகிறார் ரஜினி. ஆக, அவர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் ரசிகர்களுடனான சந்திப்பைகூட ஒத்தி வைத்தார் ரஜினி.
அதேபோல், தனது ரசிகர் மன்றத்திற்குள் அரசியல் புகுந்ததால் மன்றங்களையே கலைத்தவர் அஜித். ஆனபோதும் அவரை ரசிகர்கள் விடுவதாக இல்லை. வருகிற மே 1-ந்தேதி அஜீத்தின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு தமிழகமெங்கிலும் பேனர், கட்அவுட் என்று வைத்து வருகிறார்கள் ரசிகர்கள். இதில், மதுரையைச் சேர்ந்த அஜீத் ரசிகர்கள், அரசியல் பாணியில் அவருக்கு பேனர், போஸ்டர் வைத்துள்ளனர். அதில், மக்கள் அழைப்பது உன்னை, இனி மாற்றம் பெறட்டும் சென்னை என்று ஒரு போஸ்டரிலும் மற்றொரு போஸ்டரில் நீ தலை அசைத்தால் தமிழ்நாடு உன் பின்னால் என்று வாசகம் எழுதியுள்ளனர். ரசிகர்களின் இந்த அரசியல் அழைப்பு அஜித் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது.
Advertisement
0 comments:
Post a Comment