காதலிக்காக நடிகர் திலீப்பின் தியேட்டரில் திருடியவன் பிடிபட்டான்.!
17 நவ,2016 - 14:59 IST
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம் இது.. நாமும் இதுபற்றிய செய்தியை வெளியிட்டிருந்தோம். மலையாள ஜனப்ரிய நாயகன் என்றழைக்கப்படும் நடிகர் திலீப் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஒன்றை சாலக்குடியில் சொந்தமாக வைத்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த தியேட்டரில் இருந்து சுமார் 6.82 லட்சம் ரூபாய் திருட்டு போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. அந்த சமயத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த படங்களின் மூன்று நாட்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் தான் அது. திருடியது யாராக இருக்கும் என்கிற விபரமும் கிடைத்தது.. ஆனால் வடநாட்டை சேர்ந்த அவன் தந்திரமாக தப்பித்து தலைமறைவாகி இருந்தான்.
இப்போது இரண்டு தினங்களுக்கு முன் போலீஸாரின் பிடியில் சிக்கினான் அந்த திருடன்.. கடந்த இரண்டு மாத விசாரணையில் அவன் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும், பிழைப்புக்காக கேரளா வந்த அவனுக்கு திலீப்பின் தியேட்டரில் காலவாளி பணி கிடைத்து வேலை பார்த்துவந்தான் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கேரள போலீஸார் கடந்த 13 நாட்களாக திரிபுராவில் முகாமிட்டு அவனை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட அவன் திரிபுராவில் உள்ள தனது காதலியை திருமணம் செய்துகொள்ள பணம் தேவைப்பட்டதால் திருடியதாக கூறியுள்ளான்..
திருடிய பணத்தை கொண்டு காதலியை திருமணம் செய்ததோடு உல்லாசமாக வாழ்க்கை நடந்தி வந்தான். அவனது கையில் இருந்து ஒண்ணே முக்கால் லட்சம் ரூபாயை மட்டுமே போலீஸாரால் மீட்க முடிந்ததாம். இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் சில வருடங்களுக்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்து மணம் செய்து, தற்போது அவளை துரத்திவிட்டு, இந்தப்பெண்ணை திருமணம் செய்துள்ளனாம்.. இப்போது கேரளா ஜெயிலில் கம்பி எண்ணுகிறார் இந்த புது மாப்பிள்ளை. திருடனை சமயோசிதமாக பிடித்த கேரள போலீசாருக்கு திலீப் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
0 comments:
Post a Comment