Saturday, November 19, 2016

பிளாஷ்பேக்: "என் கண்மணி உன் காதலி..." பாடல் பிறந்த கதை


பிளாஷ்பேக்: "என் கண்மணி உன் காதலி..." பாடல் பிறந்த கதை



19 நவ,2016 - 12:28 IST






எழுத்தின் அளவு:








இளையராஜாவின் பாடல்களில் டாப் 10 பாடல்களை வரிசைப்படுத்தினால் சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி உன் காதலி..." என்ற பாடல் கண்டிப்பாக இருக்கும். 80களின் பெல்பாட்டம் இளைஞர்களை கட்டிப்போட்ட இந்தப் பாடல் 1978ம் ஆண்டு வெளிவந்தது. காதலர்களான சிவகுமாரும், மீராவும் சென்னை மவுண்ட் ரோட்டில் ஒரு டவுன் பஸ்சில் பயணம் செய்வார்கள். அந்த பயணத்தில் அவர்கள் அருகருகே அமர்ந்திருக்க அவர்களது மனசாட்சி பாடுவதாக இந்த பாடல் அமைந்திருக்கும். இடையிடையே இருவரும் மைசூரு பிருந்தாவன் கார்டரில் ஆடிவிட்டு மீண்டும் பஸ்சுக்குள் வருவார்கள். கண்டக்டர் இறங்கும் இடங்களை சொல்வார். பஸ்கண்டக்டரின் விசில் சத்தம், டிரைவரின் ஹாரன் சத்தம்கூட இசையோடு கலந்திருக்கும் அற்புத பாடல். இந்த பாடல் பிறந்த கதை பற்றி இளையாராஜா கூறியிருப்பதாவது:

சிட்டுக்குருவி" படத்தின் டைரக்டர்கள் தேவ்ராஜ்-மோகன் இரட்டையர்களில், தேவ்ராஜ் எப்போதும் ஏதாவது பரிசோதனையாக செய்ய முயற்சிப்பார். “சிட்டுக்குருவி” படத்தில் காதலனும் காதலியும், தங்கள் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். இப்போது காதலனின் உள்ளமும், காதலியின் உள்ளமும் கலந்து பாடுவது போல, ஒரு பாடலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

இது ஒரு புது விஷயமல்லவா? இதற்கு மேல் நாட்டு இசையை உபயோகிக்க முடிவு செய்தேன். இதுப்பற்றி தேவராஜிடமும் விளக்கி சம்மதமும் வாங்கி விட்டேன். கவிஞர் வாலி, இரவு நேரம் என்றும் பாராமல் ஒத்துழைத்து தினமும் வந்தார். அவரிடம் இதை விளக்கியபோது, டியூனை வாசிக்கச் சொல்லிக் கேட்டார். ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு டியூன்கள் ஒரே நேரத்தில் இசைத்தால் முரணாகத் தோன்றாதா? என்று கேட்டார்.

நான் அவரிடம், “அண்ணே! இரண்டு டியூனும் தனியாக பாடப்பட்டால் அதனதன் தனித்தன்மை மாறாமலும், ஒரு டியூனுக்கு இன்னொரு டியூன் பதில் போலவும், அமைய வேண்டும். அந்த பதில் டியூனும் தனியாகப் பாடப்பட்டால் அதன் தனித்தன்மை மாறாமல் இருக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து பாடினால், ஒட்ட வைத்தது போல இல்லாமல், ஒரே பாடலாக ஒலிக்க வேண்டும்” என்றேன். பதிலுக்கு வாலி, “என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்குறே? முதல்ல ஒரு மாதிரி பாடலைச் சொல்லு!” என்றார். உடனே வேறு ஒரு பாடலைப் பாடி விளக்கினேன். நான் ஒரு டியூனையும், கங்கை அமரன் ஒரு டியூனையும் பாடி அவருக்கு இன்னும் தெளிவாக்கினோம்.சரி என்று புரிந்ததாகத் தெரிவித்த வாலி, கொஞ்சம் யோசித்தார். பின்னர் கையில் பேடை எடுத்தவர் யாருக்கும் காட்டாமல் அவர் எழுதும் பாணியில் மளமளவென்று எழுதினார்.

பாடல் என் கைக்கு வந்தது. இரண்டு பேரும் பாடும்போது தனித்தனி அர்த்தங்களும், மொத்தமாய் பாடும்போது பொதுவான அர்த்தமும் வருவது மாதிரியே வாலி எழுதியிருந்தது எல்லோருக்குமே பிடித்துப் போயிற்று. இந்தப் பாடலை பதிவு செய்யும்போது இன்னொரு பிரச்சினை வந்தது. ஒரு குரலில் காதலன் பாட, இன்னொரு குரலில் காதலனின் உள்ளமும் பாட வேண்டும் அல்லவா? இதை எப்படி பதிவு செய்வது? ஏ.வி.எம். சம்பத் சாரிடம் “ஒரு குரலில் பாடுவதை மட்டும் முதலில் பதிவு செய்வோம். மற்றொரு குரல் பாடும் இடத்தை வெறுமனே விட்டு விடாமல் இசைக்கருவிகளை இசைப்போம். இப்படி முழுப்பாடலையும் பதிவு செய்து விட்டு, அதை மறுபடி ஓடவிட்டு இன்னொரு குரலை அதனுடன் பாட வைப்போம். பிறகு இன்னொரு ரெக்கார்டரில் மொத்தமாக இரண்டையும் பதிவு செய்வோம் என்று முடிவு செய்து தொடங்கினோம்.

டைரக்டர்கள் தேவ்ராஜ்-மோகன் இருவரில், மோகன் சாருக்கு இதில் உடன்பாடில்லை. இந்தப் பாடலும் பிடிக்கவில்லை. பாடல் பதிவு நேரத்திலும் எதுவும் பேசாமல் உம்மென்றே காணப்பட்டார். எப்படி வருமோ? என்று அடிக்கடி சந்தேகம் எழுப்பிக் கொண்டிருந்தார். தேவ்ராஜோ உற்சாகமாக இருந்தார். இந்த மாதிரி ஐடியா வருவதே கஷ்டம். புதிதாக ஏதாவது செய்வதற்கு எப்போது சந்தர்ப்பம் கிட்டும்? இப்படிச் செய்கின்ற நேரத்தில் அதைப் பாராட்டாவிட்டாலும், புதிய முயற்சி என்று ஊக்குவிக்கவில்லை என்றால் கலைஞனாக இருப்பதற்கு அர்த்தம் என்ன? என்று கூறினார்.

இந்தப் பாடலின் இடையிடையே தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு! இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னாடி போ! என்று பேசுகிற மாதிரி வரும். இதற்கு அண்ணன் பாஸ்கரைப் பேச வைத்தேன். பாடல் ரசிகர்களிடையே அதற்குரிய வரவேற்பைப் பெற்றது. என்றார் இளையராஜா.

இப்போது அந்த பாடல் வரிகளை முனுமுனுக்கத் தோன்றுமே... இதோ பாடல் வரிகள்...

ஆ: என் கண்மணி உன் காதலி இல மாங்கனி

உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்

சிரிக்கின்றதேன்,

நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ

நீ நகைச்சுவை மன்னனில்லையோ,

ஆ: நன்னா சொன்னேள் போங்கோ(வசனம்)

பெ: என் மன்னவன் உன் காதலன்

எனை பார்த்ததும்,

ஓராயிரம் கதை சொல்கிறான் கதை

சொல்கிறான்,

அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ

நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,

ஆ: என் கண்மணி......

ஆ: இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா

பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா,

பெ: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்

உறவன்றி வேறுமில்லை கவனங்களில்,

ஆ: இலமா மயில்

பெ: அருகாமையில்

ஆ: வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று

அனுபவம் சொல்லவில்லையோ,

ஆ: இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ(வசனம்)

பெ: என் மன்னவன் உன் காதலன்

எனை பார்த்ததும்,

ஓராயிரம் கதை சொல்கிறான் கதை

சொல்கிறான்,

அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ

நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,

ஆ: என் கண்மணி......

ஆ: தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு(வசனம்)

ஆ: மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே

திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே,

பெ: அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே

அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே,

ஆ: இரு தோலிலும் மணமாலைகள்

பெ: கொண்டாடும் காலமொன்று கூடுமென்று

தவிக்கின்ற தவிப்பென்னவோ,

ஆ: என் கண்மணி உன் காதலி இல மாங்கனி

உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்

சிரிக்கின்றதேன்,

நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ

நீ நகைச்சுவை மன்னனில்லையோ,

பெ: என் மன்னவன் உன் காதலன்

எனை பார்த்ததும்,

ஓராயிரம் கதை சொல்கிறான் கதை

சொல்கிறான்,

அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ

நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ,

ஆ: என் கண்மணி......


0 comments:

Post a Comment