Wednesday, May 31, 2017

12 வருடங்களுக்கு பிறகு இணைந்த சரத்குமார்-நெப்போலியன்

சரத்குமார் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘சென்னையில் ஒருநாள்-2’. சரத்குமார் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘சென்னையில் ஒருநாள்’ படத்தை போன்று பரபரப்பான திரில்லர் படம் என்பதால் இப்படத்திற்கும் அதே பெயரை வைத்துள்ளனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் கோவையில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது இப்படத்தில் நடிகர் நெப்போலியனும், நடிகை சுஹாசினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ‘தென்காசிபட்டணம்’ படத்தில் சரத்குமாரும், நெப்போலியனும் இணைந்து நடித்திருந்தார்கள். அதன்பிறகு 2005-ல் வெளிவந்த ’ஐயா’ படத்திலும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல், சரத்குமாரும், சுஹாசினியும் முதன்முறையாக இப்படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். ராண் என்பவர் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்மன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ‘நிசப்தம்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment