'பாகுபலி 2' வசூலை பின்னுக்குத் தள்ளிய 'தங்கல்'
30 மே, 2017 - 11:45 IST
இந்தியப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற சாதனையை 'தங்கல்' படம் புரிந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை வரையிலான சீன வசூல் மூலம் 'தங்கல்' படம் 'பாகுபலி 2' சாதனையை பின்னுக்குத் தள்ளிவிட்டது. 'தங்கல்' படம் சீனாவில் வெளியாகும் வரை 'பாகுபலி 2' படம்தான் உலக அளவில் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தியப் படம் என்ற சாதனையைப் புரிந்தது.
ஆனால், 'தங்கல்' படம் சீனாவில் வெளியான பிறகு 'பாகுபலி 2' படத்தின் வசூல் சாதனை பின்னுக்குப் போய்விடுமோ என்று திரையுலக வட்டாரங்களில் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். எதிர்பார்த்தது போலவே, 'தங்கல்' படம் தற்போது 1665 கோடிகளை வசூலித்து உலக அளவில் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தியப் படம் என்ற பெருமையப் பெற்றுவிட்டது. 'பாகுபலி 2' படம் 1633 கோடி வசூலைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
'தங்கல்' படம் சீனாவில் 850 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் சீன வசூலும், வரவேற்பும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அமைந்துவிட்டது.
இந்த சாதனையை 'பாகுபலி 2' முறியடிக்க வேண்டுமென்றால், படம் சீனாவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றால் மட்டுமே முடியும். இருந்தாலும் இரண்டு இந்தியத் திரைப்படங்கள் அடுத்தடுத்து 1500 கோடி வசூல் சாதனையைப் புரிந்துள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
0 comments:
Post a Comment