பிளாஷ்பேக்: காந்தி பார்த்த ஒரே படம் தமிழில் வெளிவந்தது
27 மே, 2017 - 11:40 IST
மகாத்மா காந்தி தன் வாழ்க்கையில் பார்த்த ஒரே சினிமா இந்தியில் வெளியான ராம ராஜ்யா. இந்தப் படத்தை பார்த்து விட்டு காந்தி அதனை புகழ்ந்ததாலேயே அந்தப் படம் பெரும்புகழ் பெற்றது. 1943ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை விஜய் பட் இயக்கினார். பிரேம் ஆதிப் ராமராகவும், ஷோபனா சமர்த் சீதாவாகவும், உமகாந்த் தேசாய் லட்சுமணனராகவும் நடித்திருந்தார்கள்.
காந்தி பார்த்து பாராட்டிய படத்தை தமிழ் மக்களுக்கும் காட்ட விரும்பினார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். மொழிமாற்றத்திற்கான செலவை ஏவிஎம் நிறுவனம் ஏற்க வேண்டும், லாபத்தில் 50 சதவிகிதம் பங்கு தரவேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் படத்தை வாங்கி அதனை டப் செய்தார் செட்டியார். இந்தி வசனங்களின் வாயசைவுக்கு பொருந்திப்போகிற மாதிரி வசனம் எழுதியிருந்தார் தேவநாராயணன், இந்திப் படத்தில் ராமர் பட்டாபிஷேக காட்சியுடன் தொடங்கும். ஆனால் அதற்கு முந்தைய கதையான ராமர், சீதை சந்திப்பு, ராமர் காட்டுக்குப் போனது, இலங்கேஸ்வரனை வென்றது உள்ளிட்ட கதையை நிழற்படமாக எடுத்து அதற்கு டி.கே.பட்டம்மாள் பாடலை பின்னணியாக சேர்த்து படத்தை வெளியிட்டார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பெரும் பெற்றி பெற்றது. ஏவிஎம் நிறுவனத்திற்கும், இந்திய தயாரிப்பாளருக்கும் பெரும் லாபத்தைக் கொடுத்தது.
0 comments:
Post a Comment