Sunday, May 28, 2017

சச்சின் எ பில்லியன் டிரீம்ஸ் – திரை விமர்சனம்

கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்பட்ட சச்சினின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஜேம்ஸ் எர்ஸ்கைன் என்பவர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள படம்தான் ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’.

இப்படம் ஒரு சினிமாவாக இல்லாமல் சச்சினுக்கு கிரிக்கெட் ஆர்வம் தொடங்கியது முதல், அவர் சாதித்த ஒவ்வொரு சாதனைகள் தொடர்ந்து கடைசியாக உலககோப்பை பெற்றது முதல் அனைத்து வீடியோக்களையும் தொகுத்து ஒரு பதிவாக ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

1983-ல் உலகக்கோப்பையை இந்திய அணி வாங்கும்போதுதான் சச்சினுக்கு கிரிக்கெட் ஆர்வம் துளிர்விடுகிறது. அப்போது சச்சினின் கிரிக்கெட் ஆசைக்கு அவரது அண்ணன் உறுதுணையாக இருக்கிறார். பொதுவாக சச்சின் என்றாலே அமைதி என்பதுதான் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், சிறுவயதில் அவர் பேரிய சேட்டைக்காரர் என்பதை காட்டி, அதன்பிறகு கிரிக்கெட் அவரை எப்படி நல்வழிப்படுத்துகிறது என்பதை காட்டியவிதம் ரசிக்க வைக்கிறது.

கிரிக்கெட் மைதானத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக சச்சினை பார்த்த நமக்கு, அவர் குடும்பத்தினரிடம் எப்படி நடந்துகொள்வார். அவர்களுக்காக எப்படி நேரம் ஒதுக்குகிறார்? நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என நமக்கு தெரியாத பல விஷயங்களையும் இந்த படத்தில் காட்டியிருக்கிறார்கள். சச்சின் தன்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும்போது எடுத்த வீடியோக்களை இந்த படத்தில் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

தனது மனைவி, நண்பர்கள் குறித்து பாசமான உணர்வுகளை சச்சின் பகிரும் விவரிக்கும் இடங்கள் எல்லாம் அனைவருக்கும் ஒரு பாடமாய் அமைந்திருக்கிறது.

சச்சின் விளையாடிய முக்கிய போட்டிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு போட்டியின்போதும் தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது? என்பதையும் இதில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அதேபோல் கேப்டன் பதவியின்போது தனக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தது என்பது குறித்தும், பயிற்சியாளர் கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது, அது வீரர்களுக்குள் எவ்வித பிரிவினைகளை ஏற்படுத்தியது என்பதையும் இப்படத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

2 மணி நேரத்தில் சச்சினின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை ரசிகர்களுக்கு எந்தளவுக்கு எடுத்துச் சொல்ல முடியுமோ? அந்தளவுக்கு அழகாகவும், ரசிக்கும்படியாகவும் சொல்லியிருக்கிறார் ஜேம்ஸ் எர்ஸ்கைன். கிரிக்கெட் என்பதையும் தாண்டி, சச்சினின் நிஜ வாழ்க்கையையும் அருகில் இருந்து பார்த்ததுபோன்ற உணர்வை கொடுத்திருக்கிறது.

‘தோனி’ படம்போன்று முழுநீள படமாக எடுக்காமல், ஒரு ஆவண படமாக எடுத்திருப்பதுதான் படத்தின் மீதான சுவாரஸ்யத்தை குறைப்பதாக தெரிகிறது. மற்றபடி, மைதானத்தில் சச்சின் இருந்தால் ரசிகர்கள் எப்படி ஆர்ப்பரிப்பார்களோ, அந்தளவுக்கு தியேட்டரிலும் சச்சின் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்சன், ரிக்கி பாண்டின், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம் என அவர்களை எதிர்த்து ஆடியவர்களும், சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, தோனி, கோலி, ஹர்பஜன் சிங் என பலரும் சச்சினுடன் விளையாடிய அனுபவங்களை இந்த படத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

சிறுவயதில் தான் கண்ட கனவு நனவாகும் சமயத்தில் தன்னுடைய மனநிலை எந்தமாதிரி இருந்தது என்பதை சச்சின் விவரிக்கும் காட்சிகளில் எல்லாம் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை பெரிதளவில் இல்லாவிட்டாலும், ஒருசில இடங்களில் ரசிக்க வைக்கிறது. பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ கொண்டாட வேண்டும்.

0 comments:

Post a Comment