சென்னை, போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் ராஜசேகரன். இவர், இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காலா படக்குழுவினர் மீது புகார் ஒன்றைக் கொடுத்தார்.
இதுகுறித்து ராஜசேகரன் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…
” ‘கரிகாலன்’ தலைப்பு, கதையின் மூலக்கரு, பாடல்கள் ஆகியவை நீதி வழுவாத தமிழ்அரசர் கரிகால் சோழனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்டது.
அவர், அந்தக் காலத்தில் நாட்டு மக்களுக்குச் செய்த அறச்செயல், வீரச்செயல் போன்றவற்றை மையப்படுத்தியதாகும். இந்தக் கதையில், நாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து வெளியிடுவதே என்னுடைய லட்சியம்.
இதற்காக, கடந்த 1995, 1996ல் அன்றைய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்திய நாராயணனிடம் ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்துக்குச் சென்று, கரிகாலன் தலைப்பு, கதை பற்றி கூறினேன்.
மேலும், அவரின் உதவியுடன் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, ‘பிறகு பேசலாம்’ எனச் சொல்லி என்னை புகைப்படம் மட்டும் எடுக்க அனுமதித்தனர்.
ஏப்ரல் 1996ல் பிஆர்ஓ. நெல்லை சுந்தரராஜன் ஏற்பாட்டில், என்னுடைய படைப்பின் ‘மயிலே.. குயிலே’ என்ற ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்தது.
அதில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தலைமையில் ஆடியோ வெளியிட, நடிகை மோகினி அதைப் பெற்றுக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.ஆர். விண்மீன் கிரியேஷன் மூலமாக வெளியிடயிருக்கும் திரைப்படம், ‘கரிகாலன்’, ‘உடன்பிறவா தங்கச்சி’ ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன். அது, பத்திரிகைகளிலும் வெளியானது. ‘கரிகாலன்’ என்ற தலைப்பு, கதையின் மூலக்கரு முழுவதும் என்னுடையதே.
கரிகாலன் தலைப்பு மற்றும் கதையை, சில்வர் லைன் ஃபிலிம் ஃபேக்டரிமூலம் நடிகர் விக்ரமை வைத்து படத்தைத் தொடங்கி, காட்சிகள் வெளியானதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 2011ல் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
அந்தப் படத்தை எடுக்க, நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து, என்னுடைய கரிகாலன் திரைக்கதையைப் பல சினிமா நிறுவனங்களின் தயாரிப்பாளர்களிடம் சொல்லிவந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ்மூலம் இயக்குநர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகத் தகவல் எனக்குத் தெரிந்தது.
அந்தப் படத்தின் பெயர், ‘காலா’, கரிகாலன் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன்.
என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும் கதையையும் கதையின் மூலக்கருவையும் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் திருடி, ‘கரிகாலன்’ என்ற தலைப்பை காலா, கரிகாலன் என்றும் மறுவடிவமைப்புச் செய்துள்ளனர்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.
Police case filed about Kaala Title and Story
0 comments:
Post a Comment