ஒரு மாதத்தில் 'பாகுபலி 2' வசூல் எவ்வளவு?
30 மே, 2017 - 12:19 IST
'பாகுபலி 2' திரைப்படம் வெளிவந்து ஒரு மாதத்தைக் கடந்து விட்டது. படம் வெளியான முதல் நாளிலிருந்து தொடர்ந்து பல வசூல் சாதனைகளை இந்தப் படம் புரிந்து வந்தது. ஏறக்குறைய முதல் நாளில் வெளியான தியேட்டர்களில் இன்னமும் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த இரண்டாவது படம், இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ள படம், கேரளா தவிர மற்ற மாநிலங்களில் அதிக வசூலைப் பெற்ற படம், நிகர வசூலில் இந்தியாவில் 1000 கோடியைக் கடந்த முதல் படம், மொத்த வசூலில் 1500 கோடியைக் கடந்த முதல் படம் என பல பெருமைகளை இந்தப் படம் பெற்றுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் சுமார் 1600 கோடிகளை இந்தப் படம் வசூலித்துள்ளது. இதில் பங்குத் தொகையாக மட்டும் சுமார் 800 கோடி கிடைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் 1300 கோடி வசூலையும் வெளிநாடுகளில் 300 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளது.
ஒரு டப்பிங் படமாக தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தும், கேரளாவில் 60 கோடி வசூலைக் கடந்தும், வட இந்தியாவில் 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்தும் இந்தப் படம் சாதனை புரிந்துள்ளது.
தெலுங்கு மொழி பேசும் இரு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 190 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
இந்த வாரத்துடன் 'பாகுபலி 2' படத்தை பல தியேட்டர்களில் எடுத்துவிடும் சூழ்நிலை உள்ளது. அதனால், 2000 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் கடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
0 comments:
Post a Comment