நினைவலைகள்: சாதனை நாயகன் தாசரி நாராயணராவ்
31 மே, 2017 - 10:30 IST
தெலுங்கு சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்த தாசரி நாராயணராவ் நேற்று காலமானார். அவரைப் பற்றிய சில நினைவுகள்...
1947ம் ஆண்டு பிறந்த தாசரி நாராயணராவ் தனது 75வது வயதில் மறைந்தார்.
கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். அப்போதே கல்லூரிகளுக்கு இடையே நடந்த நாடகப் போட்டியில் இவர் இயக்கிய நாடகங்களே வெற்றி பெற்றது. சிறந்த நாடக இயக்குனருக்கான ஆந்திர அரசின் விருது பெற்றார்.
கல்லூரி படிப்பை முடித்ததும் ராமோஜிராவ் நடத்திய ஈநாடு பத்திரிக்கையில் பத்திரிகையாளராக சேர்ந்து பணியாற்றினார். இவரின் பல சென்சேஷனல் பேட்டிகளும், கட்டுரைகளும் ஆந்திராவில் பரபரப்பை கிளப்பியது.
ரங்குலா ரத்னம் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு 1972ம் ஆண்டு தாதா மணவாடு படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.
150க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கியவர் என்ற சாதனை படைத்தார். இன்றைய காலகட்டத்தில் இந்த சாதனையை எவராலும் வெல்ல முடியாது என்பது உறுதி.
இவர் இயக்கிய கன்டே குத்ரனு கன்னு, பங்காரு குடும்பம், சுவர்கம் நகரம், சம்சாரம் சாகரம், தாதா மனவாடு படங்கள் சிறந்த படத்திற்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகளை பெற்றது. கன்டே குத்தனு கன்னு, மகா சண்டேசம் படங்கள் தேசிய விருதை பெற்றது.
தாசரி நாராயணராவ் நல்ல நடிகர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் மமாகுரு, மேஸ்திரி படங்களில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றார்.
13 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 24 படங்களை தயாரித்துள்ளார். 18 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். ஆச்சர்யமான விஷயம் யங் இண்டியா என்ற படத்தில் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
சினிமாவின் நீட்சியான சின்னத்திரையையும் விட்டு வைக்கவில்லை. அபிஷேகம், கோகுலம்மா சீதா என்ற இரண்டு சீரியல்களை தயாரித்தார். விஸ்வாமித்ரா என்ற சீரியலை இயக்கினார்.
ராஜீவ் காந்தி அரசியலில் பிசியாக இருந்தபோது தாசரி அரசியலில் குதித்தார். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த அவர் ராஜ்ய சபா எம்.பியாகி மத்திய இணை அமைச்சராகவும் ஆனார்.
அரசு மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்து பல்வேறு விருதுகளை பெற்ற தாசரி நாராயணராவுக்கு ஆந்திரா பல்கலைகழம் அவரது தெலுங்கு கலாச்சாரம் மற்றும் தெலுங்கு சினிமா பணிகளுக்காக கலாபூர்ணா (சகலகலா வல்லவன்) என்ற டைட்டிலோடு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இருந்தார் அது நிறைவேறாமலே தன் திரைப்பயணத்தை முடித்துக் கொண்டார்.
0 comments:
Post a Comment