Thursday, May 25, 2017

'பார்ட்டி'க்கு போனது இல்லை என பொய் சொல்ல மாட்டேன்: அருள்நிதி


'பார்ட்டி'க்கு போனது இல்லை என பொய் சொல்ல மாட்டேன்: அருள்நிதி



26 மே,2017 - 01:40 IST






எழுத்தின் அளவு:








தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து வந்த மற்றொரு திரையுலக வாரிசு, அருள்நிதி. ஏற்கனவே சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது, ராதாமோகன் இயக்கத்தில், பிருந்தாவனம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த அனுபவம் குறித்து பேசுகிறார், அருள்நிதி.

பிருந்தாவனம் படம் பற்றி சொல்லுங்களேன்!

முதன்முறையாக, வாய் பேச முடியாத, காது கேட்கும் திறன் இல்லாத இளைஞனாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். விவேக், நடிகராகவே நடித்திருக்கிறார். அவரது ரசிகராக, நான் நடித்திருக்கிறேன். எனக்கு ஜோடியாக, தான்யா நடித்துள்ளார்.

இந்த படத்துக்காக உங்களை எப்படி தயார் படுத்தினீர்கள்?

ராதாமோகன், இதேபோன்ற கதையம்சம் உடைய, மொழி படத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர். விஜயா மேடம் என்பவர், எனக்கு இது குறித்து பயிற்சி அளித்தார். படப்பிடிப்பு நடக்கும் போது, அவங்களும் கூட இருந்தாங்க. கடினமான காட்சிகளில் நடிப்பதற்கு, விஜயா மேடம், ரொம்ப உதவியாக இருந்தாங்க.

உங்களுக்கு இந்த படம் அடுத்த கட்டத்துக்கு போக எந்த அளவு உதவியாக இருக்கும்?

மவுனகுரு படத்துக்கு பின், இந்த படம், எனக்கு ரொம்ப முக்கியமான படமாக இருக்கும். கண்டிப்பாக, ரசிகர்களுக்கு நல்ல படம் பார்த்த திருப்தியை, இந்த படம் கொடுக்கும்.

உங்க உயரத்துக்கு, ஹீரோயின் கிடைப்பது கஷ்டமாச்சே?

அது உண்மை தான். என்னுடன் நடிப்பவர்கள் எல்லாம், கீழே பாக்ஸ் போட்டுத் தான் நடிப்பாங்க. இதுவரை, எந்த நடிகைக்கும், நான் சிபாரிசு செய்தது இல்லை. இயக்குனர் யாரை தேர்வு செய்து, ஹீரோயின் என சொல்கிறாரோ, அந்த நடிகையுடன் நடிப்பேன். தனிப்பட்ட முறையில், யாரையும், நான் சிபாரிசு செய்வது இல்லை.

உங்களின் நடிப்புக்கு, குடும்பத்தினர் 'ரியாக் ஷன்' எப்படி இருக்கும்?

படம் பார்த்துவிட்டு, முகத்துக்கு நேராக விமர்சனம் பண்ணுவாங்க. இன்னும் கொடுமை என்னவென்றால், சில பேருக்கு போன் செய்து, 'அவன் நடிப்பு சரியில்லை' என்றும் விமர்சிப்பாங்க. அதேநேரத்தில், படம் நன்றாக இருந்தால், அதை பாராட்டவும் தவறுவது இல்லை.

தாத்தா கொடுத்த அன்பு பரிசு?

வம்சம் படத்தை, தாத்தா, இரண்டு முறை பார்த்தார். மவுனகுரு படமும் பார்த்தார். வம்சம் பார்த்து விட்டு. என்னை நேரில் அழைத்து, ஒரு வாட்ச் பரிசாக கொடுத்தார்.

அடுத்த தலைமுறையினரில், உங்க குடும்பத்தில் யார் அரசியலுக்கு வரலாம்?

சினிமா, அரசியல் இரண்டுமே ஒன்றாக கலந்திருக்கு; யாராவது ஒருத்தர் பெயரை சொல்லி, அது, மற்றவங்களுக்கு கஷ்டமாயிடுச்சுன்னா, சிரமம். அதனால், இந்த கேள்வியை தவிர்க்க விரும்புகிறேன்.

பார்ட்டி, நண்பர்கள்?

நான், பார்ட்டிக்கு போனது இல்லை என, பொய் சொல்ல மாட்டேன். கல்லுாரியில் படிக்கும் போது, போனது உண்டு. இப்போது, குடும்பம், குழந்தை என ஆகிவிட்டதால், பார்ட்டிக்கு விடை கொடுத்துவிட்டேன்.


0 comments:

Post a Comment