விஜய் மில்டன் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல்
27 மே, 2017 - 18:06 IST
இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் காதல், கல்லூரி மற்றும் லிங்குசாமி தயாரித்த வழக்கு எண் 18/9 போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைக் கையில் எடுத்து அதை மிக நேர்த்தியான படைப்பாக வழங்கி வந்தார்.
வழக்கு எண் 18/9 படத்தைத் தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் ரா.. ரா.. ராஜசேகர் படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தின் இயக்குநர் லிங்குசாமியின் உறவினர் தான் ஹீரோ. ஏறக்குறைய 4 கோடி செலவு செய்யப்பட்டுவிட்டநிலையில், லிங்குசாமிக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது.
திடீரென அவருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் சீனுராமசாமி இயக்கிய இடம்பொருள் ஏவல், பாலாஜி சக்திவேல் இயக்கி வந்த ரா..ரா.. ராஜசேகர், பன்னீர்செல்வம் இயக்கிய படம், மற்றம் லிங்குசாமி இயக்க விருந்த புதிய படம் என அத்தனை படங்களின் பணிகளும் முடங்கிப்போயின. இதனால் பாதிக்கப்பட்ட சீனுராமசாமி விஜய்சேதுபதியிடம் சரண் அடைந்தார். அவரது புண்ணியத்தில் தர்மதுரை, மாமனிதன் படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
பன்னீர்செல்வம் கருப்பன் படத்தை இயக்கி வருகிறார். வேறு பட வாய்ப்பு இல்லாமல் இருந்த பாலாஜி சக்திவேல், இப்போது விஜய் மில்டனின் 'ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க புதுமுகங்கள் நடிக்கவுள்ளார்கள். இதற்கான நேர்முகத் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
0 comments:
Post a Comment