ஜூலையில் ரஜினி தனிக்கட்சி : ரஜினியின் அண்ணன் பேட்டி
27 மே, 2017 - 10:28 IST
ஜூலை மாதம் ரஜினியின் புதிய கட்சி உருவாகும், தமிழ்நாட்டில் புதிய அரசியல் சகாப்தம் மலரும் என ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்வாட் தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதை நேரடியாக சொல்லாவிட்டாலும் ரசிகர்கள் சந்திப்பு மூலமும், ரசிகர்களிடத்தில் போருக்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது அவரது அரசியல் பிரவேசம் உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே கட்சி தொடர்பாக கொடி, சின்னம் உள்ளிட்ட வேலைகள் நடந்து வருவதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம், அதோடு சுதந்திர தினத்தில் ரஜினியின் புதிய கட்சி மலரும் என்று சொல்லியிருந்தோம். இந்நிலையில் ஜூலை மாதமே ரஜினியின் புதிய கட்சி உருவாகும் என ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்வாட் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் சத்யநாராயணா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது... ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி தனது நண்பர்கள், குடும்பத்தார்கள், நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ரசிகர்களுடனான முதல் சுற்று சந்திப்பு முடிந்துள்ளது. அவர்களுடன் பேசி வருகிறார். ஜூன் மற்றும் ஜூலைக்குள் எவ்வளவு ரசிகர்களை சந்திக்க முடியுமோ, அவ்வளவு ரசிகர்களையும் சந்தித்து விட்டு புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார்.
ரஜினி அரசியலுக்கு வருவதன் முக்கிய நோக்கமே ஊழலை ஒழிப்பது தான். அரசாங்கம் மக்களுக்கு எவ்வளவோ பல நல்ல திட்டங்களை கொண்டு வருகிறது, ஆனால் அது முழுமையாக மக்களை சென்றடைவதில்லை. இந்த கவலை ரஜினிக்கு எப்போதும் உண்டு. இதையெல்லாம் சரி செய்யத்தான் அவர் அரசியலுக்கு வருகிறார். அப்படி அவர் அரசியலுக்கு வரும்போது தமிழ்நாட்டில் புதிய அரசியல் சகாப்தம் மலரும். ரஜினி இப்போதைக்கு எந்த கட்சியிலும் சேர மாட்டார். கட்சி கொடி, சின்னம் போன்றவற்றுக்காகன வேலைகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment