அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ரஜினியுடன் போட்டோ எடுக்க அனுமதி
13 மே,2017 - 12:30 IST
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் ரஜினிகாந்த், ஆண்டுக்கு ஒருமுறையாவது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரஜினி, ரசிகர்களுடனான சந்திப்பை நிறுத்திவிட்டார். பிறந்தநாள் அன்று மட்டும் அவர் வீட்டில் இருந்தால் ரசிகர்களை வெளியே வந்து சந்தித்துவிட்டு போவார். இந்நிலையில் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
அதன்படி கடந்த மாதம் 12ந் தேதி முதல் 17ந் தேதி வரை ரசிகர்களை சந்திக்கவும், போட்டோ எடுக்கவும் ரஜினி சம்மதம் சொல்லியிருந்தார். ஆனால் குரூப் போட்டோ வேண்டாம், தனித்தனியாக போட்டோ எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு கொண்டதால் அன்றைய சந்திப்பை தள்ளி வைத்தார்.
இதையடுத்து வருகிற மே 15ந் தேதி முதல் 19ந் தேதி வரை 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொள்ள இருக்கிறார் ரஜினி. இந்த 5 நாட்களும் திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். மற்ற மாவட்டங்களுக்கான தேதி பின்னர் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது.
இந்நிலையில் அகில இந்திய ரஜினி ரசிகர்மன்ற தலைவரான சுதாகர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே ரஜினியுடன் போட்டோ எடுக்க அனுமதிக்கப்படுவர், இல்லாதவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆகவே, ரஜினியுடன் போட்டோ எடுக்க வருபவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment