பிரபாஸ் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராணா..!
15 மே,2017 - 17:42 IST
'பாகுபலி-2' படம் இவ்வளவு பெரிய வெற்றிகளை பெற்றது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்தப்படம் குறித்த புதுப்புது தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. அவற்றில் முக்கியமானவை இந்தப்படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க ரம்யா கிருஷ்ணனுக்கு முன் ஸ்ரீதேவிக்கு தான் அழைப்பு விடுத்தார்கள் என்றும் தேவசேனா கேரக்டரில் அனுஷ்காவிற்கு முன்னதாக நயன்தாராவிடம் கேட்கப்பட்டது என்றும் அவர்கள் நடிக்க மறுத்ததால் தான் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் சொல்லப்பட்டு வந்தது.
அடுத்ததாக புதிதாக கிளம்பிய வதந்தி என்னவென்றால் இந்தப்படத்தில் 'பாகுபலி' கேரக்டரில் நடிக்க முதலில் ஹிருத்திக் ரோஷனைத்தான் அணுகினாராம் ராஜமௌலி. ஆனால் அவர் மறுத்துவிடவே, அதன்பின்னரே பிரபாஸ் தேர்வானார் என பாலிவுட் ஊடகங்கள் சில கொளுத்திப்போட்டன. ஆனால் படத்தில் வில்லனாக நடித்த ராணா, அந்த தகவலில் துளிகூட உண்மையில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த ஸ்கிரிப்ட்டை முடிக்கும் போதே பிரபாஸ் தான் ஹீரோ என ராஜமௌலி முடிவு செய்திருந்தார். அதற்கேற்ற மாதிரி தனது தந்தை விஜயேந்திர பிரசாத்திடம் பாகுபலி கேரக்டர் உருவாக்கத்தை பார்த்து பார்த்து செதுக்கவும் சொல்லியிருந்தார் என தெளிவுபடுத்தியுள்ளார் ராணா.
0 comments:
Post a Comment