பிளாஷ்பேக்: கோவை சரளா தான் எனக்கு ஜோடி: கமல் பிடிவாதம்
13 மே,2017 - 10:11 IST
1995ம் ஆண்டு வெளிவந்த படம் சதிலீலாவதி. இதில் கமல் ஹீரோ. அவரது ஹீரோயின் யார் தெரியுமா? கோவை சரளா. இவர்களுடன் ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா நடித்தார்கள். பாலுமகேந்திரா இயக்கினார். ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்தது.
ரமேஷ் அரவிந்தின் மனைவி கல்பனா. அவர் குண்டாக இருக்கிறார் அழகாக இல்லை என்று அவரை புறக்கணித்துவிட்டு அழகான இளம் பெண் ஹீரா பின்னால் சுற்றிக் கொண்டிருப்பார். அவரை திருத்துகிற பணி கமலுக்கு. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தை அவருக்கு புரிய வைக்க வேண்டியது கமல் வேலை.
இந்தக் கதையை பாலுமகேந்திரா கமலிடம் சொன்னதும் நானே தயாரிக்கிறேன் என்றார். அதோடு என் மனைவி கோவை சரளா என்றார். அதாவது என் மனைவி பழனி கேரக்டரில் கோவை சரளா நடிக்க வேண்டும் என்றார். இதைக் கேட்டு பாலுமகேந்திரா அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவர் நல்ல படங்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும் நல்ல வசூல் தரக்கூடிய ஒரு கமர்ஷியல் படம் இயக்கும் எண்ணத்தில் இருந்தார். அதனால் கமலுக்கு ஜோடியாக இன்னொரு முன்னணி நடிகையை அவர் முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் கமல் கோவை சரளா தான் என் மனைவியாக நடிப்பார். இந்த கேரக்டருக்கு அவர் தான் சரியான பொருத்தம் என்றார். தயாரிப்பாளராச்சே வேறு வழியின்றி பாலுமகேந்திராவும் ஒப்புக் கொண்டார். கோவை சரளா, கமல் மனைவி பழனியாக நடித்தார். கோவை சரளாவுக்காக கமலும் கோயம்புத்தூர் ஸ்லாங் பேசி நடித்தார். இருவருக்கும் ஒரு ரொமான்ஸ் பாடலும் இருந்தது.
கமல் ஜோடி கோவை சரளா என்றதும் பத்திரிகைகளில் கிண்டலும், கேலியும் பறந்தது. ஆனால் கமல் எதையும் கண்டு கொள்ளவில்லை. படம் வெளிவந்ததும் கமல், கோவை சரளா ஜோடி பெரிதாக பேசப்பட்டது. "கணவன் மனைவியாக இருந்தால் சக்திவேல் கவுண்டர் (கமல்), பழனி (கோவை சரளா) மாதிரி இருக்க வேண்டும்" என்று பெண்கள் மத்தியில் பேச்சு வந்தது. கமல் பற்றியும் கோவை சரளா பற்றியும் தவறாக கணித்தற்காக பாலுமகேந்திரா வருத்தப்பட்டார். ஒரு சூப்பர் ஹீரோ, சாதாரண காமெடி நடிகைக்கு ஜோடியாக நடித்தது தமிழ் சினிமாவில் முக்கியமான வரலாற்று குறிப்பு.
0 comments:
Post a Comment