பாகுபலி 3, ராஜமௌலி பதில் என்ன ?
06 மே,2017 - 17:42 IST
2015ம் ஆண்டு வெளிவந்த பாகுபலி படம், 2017ம் ஆண்டு கடந்த மாதம் 28ம் தேதி வெளிவந்த பாகுபலி 2 படம் ஆகிய இரண்டுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள். பாகுபலி 2 படம் ஒரே வாரத்தில் பல சாதனைகளை முறியடித்துவிட்டு, மேலும் பல புதிய சாதனைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.
இரண்டு படங்களின் மொத்த செலவு சுமார் 400 முதல் 450 கோடி ரூபாய்தான் ஆகியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு படத்தின் வசூலையும் சேர்த்தால் இப்போதைக்கு 1500 கோடியைத் தாண்டிவிட்டது. இன்னும் ஒரு 500 கோடியைக் கடக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
பாகுபலி படத்தின் முதல் பாகத்திற்கு பாகுபலி - ஆரம்பம் (Baahubali - The Beginning), இரண்டாம் பாகத்திற்கு பாகுபலி - முடிவு (Baahubali - The Conclusion) எனப் பெயர் வைத்தார்கள். இரண்டாம் பாகத்திலேயே முடிவு என்று சொல்லிவிட்டதால் பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் வர வாய்ப்பில்லை. இருந்தாலும் மிகப் பெரும் வெற்றி இரண்டு பாகங்களுக்கும் கிடைத்துள்ளதால் பாகுபலியின் மூன்றாம் பாகம் வராதா என சில நாட்களுக்கு முன் பிரிட்டிஷ் திரைப்படக் கல்லூரியில் ராஜமௌலியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராஜமௌலி, “என்னுடைய அப்பா விஜயேந்திர பிரசாத், இதற்கு முன் கொடுத்தது போன்ற சுவாரசியமான கதையைக் கொடுத்தால், இத்துடன் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. மீண்டும் ஒரு பாகுபலி படத்தை உருவாக்கலாம் எனச் சொல்லியிருக்கிறார்.
இதற்கு முன்பு மூன்றாம் பாகம் பற்றி பேசும் போது வேறு நட்சத்திரங்களுடன், வேறு கதையில் மகிழ்மதி பேரரசு பற்றி படம் எடுக்கலாம் என்று ராஜமௌலி சொல்லியிருந்தார். இருந்தாலும் அடுத்த 5 வருடங்களுக்குள் அடுத்த பாகம் வருமா என்பது சந்தேகம்தான்.
0 comments:
Post a Comment