ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ல் வெளியான `எந்திரன்’ படத்தின் இரண்டாவது பாகமாக `2.0′ படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் `2.0′ படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக ராஜு மகாலிங்கம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ல் ரிலீசாக இருக்கிறது. அதற்கு முன்னதாக ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `2.0′ படத்தின் புரமோஷனில் புதுமையான முயற்சியை படக்குழு மேற்கொள்ள இருக்கிறது. அதாவது, படத்தின் புரமோஷனுக்காக ஒரு உலக சுற்றுலாவை தொடங்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
சாதாரணமாக ஒரு தமிழ் படத்திற்கு புரமோஷன் செய்தால், படக்குழு ஒரு உள்ளூர் சுற்றுலா அல்லது பக்கத்து மாநிலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும். இந்நிலையில், தமிழ் படம் ஒன்றின் புரமோஷனுக்காக உலக சுற்றுலா நடத்த இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை.
இதற்கு முன்பாக `பாகுபலி 2′ படத்தின் புரமோஷனுக்காக துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு `பாகுபலி’ படக்குழு சென்றிருந்தது. விரைவில் சீனாவில் புரமோஷன் பணிகளில் ஈடுபட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment