துபாயில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் கஸ்தூரி, துபாயில் பெரிய டானாக இருப்பவரை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். பெரிய டானுக்கு நெருக்கமானவர்களை சுற்றி வளைக்கிறது போலீஸ். அப்போது மஹத்தையும் கைது செய்து விசாரிக்கிறது. அப்போது அவர் ‘அஸ்வின் தாத்தா’ பற்றிய கதையை கூற ஆரம்பிக்கிறார்.
அதன்பின்னர் 90 காலகட்டத்தை நோக்கி பிளாஷ் பேக் விரிகிறது. மதுரையில் நண்பர்கள் விடிவி கணேஷ், மஹத் உடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு (மதுர மைக்கேல்). நண்பர்கள்தான் உலகமே என்று வாழ்ந்துவரும் சிம்பு, மதுரையில் இருக்கும் மிகப்பெரிய ஆளுக்கு கீழ் அடியாளாக பணியாற்றி வருகிறார். இதனால், ஊரிலேயே மிகவும் கெத்தான ஆளாக வலம்வருகிறார் சிம்பு.
இந்நிலையில், ஒருநாள் ஸ்ரேயாவை பார்க்கும் சிம்புவுக்கு அவள்மீது காதல் வருகிறது. முதலில் சிம்புவை கண்டுகொள்ளாத ஸ்ரேயா ஒருகட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இரண்டு பேரும் சேர்ந்து ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுக்கையில், சிம்பு அடியாளாக பணியாற்றுபவரின் மகன் சிம்புவை போலீசில் மாட்டிவிடுகிறான்.
சிம்பு ஜெயிலுக்கு போன நேரத்தில் ஸ்ரேயாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை நடத்த பார்க்கிறார்கள். அப்போது, சிம்புவின் நண்பர்கள் அவரை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து, ஸ்ரேயாவிடம் சேர்த்து வைக்க நினைக்கிறார்கள். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சிம்பு, ஸ்ரேயாவை மணமுடித்தால் அவளால் நம்முடன் நிம்மதியாக வாழமுடியாது என்று முடிவெடுத்து, ஊரை விட்டு ஓடி தலைமறைவாகிறார்.
பின்னர் நாட்கள் கடக்கிறது. சிம்புவுக்கும் வயதாகிவிடுகிறது. வயதானபிறகு ‘அஸ்வின் தாத்தா’ என்று அழைக்கப்படும் சிம்பு, தன்னுடைய நண்பர் விஜயகுமார் தன்னைவிட இளம் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பார்த்து, தானும் அதேபோல் இளம் வயது பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்காக, வயதானவரை திருமணம் செய்துள்ள பெண்கள் வேண்டும் என்று விளம்பரமும் கொடுக்கிறார்.
அந்த விளம்பரத்தை பார்த்து நிறைய பேர் வருகிறார்கள். அதில், தமன்னாவும் வருகிறார். தமன்னா மணப்பெண்ணாகத்தான் வந்திருக்கிறாள் என்று நினைக்கும் சிம்பு, அதன்பின்னர், அவள் கோவை சரளாவுக்கு மாப்பிள்ளை தேடித்தான் அங்கு வந்திருப்பதை அறிகிறார். இருப்பினும், தமன்னாவுடன் நட்பு வளர்த்து வருகிறார்.
இந்த நட்பு நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாக மாறியதா? இல்லையா? என்பதே முதல்பாகத்தின் மீதிக்கதை. கஸ்தூரி தேடும் டானுக்கும், இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? என்பதை இரண்டாம் பாகத்தில் சொல்லவிருக்கிறார்கள்.
இரண்டு பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தில் சிம்பு, மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா என்ற இரண்டு கெட்டப்புகளில் வருகிறார். மதுர மைக்கேல் கெட்டப்பில் இவர் அறிமுகம் காட்சி அவர் சொல்வதுபோலவே சிறப்பு. மதுர மைக்கேல் கெட்டப்புகளில் ரொம்பவும் மாஸாக காட்டியிருக்கிறார்கள். அதற்கேற்றார்போல், இவருடைய நடிப்பும் படத்திற்கு ரொம்பவும் மாஸாக இருக்கிறது. அறிமுக பாடலில் ரசிகர்களின் தோளின்மீதே நின்று இவர் ஆடும் ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
அஸ்வின் தாத்தா கெட்டப்பில் கொழுக் மொழுக்கென்று இருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கேற்றவாறு நடிப்பிலும், நகைச்சுவையிலும் ரசிக்க வைத்திருக்கிறார். இருப்பினும், இதுவெல்லாம் சிம்புவின் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தும்படி அமைந்திருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியே. சிம்புவின் நண்பராக வரும் மஹத் தனக்கு என்ன வருமோ? அதை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார்.
விடிவி கணேஷ் வழக்கம்போல காமெடி, செண்டிமெண்ட் என ரசிக்க வைத்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் வழக்கம்போல் தன்னுடைய குரலாலேயே ரசிகர்கள் வயிறு குலுங்க வைத்திருக்கிறார். ஸ்ரேயா எளிமையாக வந்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அமைதியான முகம், மென்மையான கோபம் என தன்னுடைய நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
தமன்னா கிளாமர் உடையில் வந்து அனைவரையும் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். வயதான தாத்தாவை காதலிக்கும் வெகுளியான பெண்ணாகவும், முதியோர் காப்பகத்தை ஏற்று நடத்தும் பொறுப்பான பெண்ணாகவும் எளிதாக நம்மை கவர்கிறார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை ரொம்பவும் நுணுக்கமாக அறிந்து வைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். எந்தெந்த இடத்தில் ரசிகர்களை துள்ளி எழ வைக்கலாம் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் காட்சிகளை அமைத்திருக்கிறார். அதேபோல், ஒரு கமர்ஷியல் படத்துக்குண்டான அத்தனை அம்சங்களும் இந்த படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், படத்தின் திரைக்கதையில் ரொம்பவும் கோட்டை விட்டுவிட்டார். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசிக்கும்படியாக படம் இருந்திருக்கும்.
யுவனின் பின்னணி இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. மதுர மைக்கேல் தீம் மியூசிக்தான் படத்தில் மிகப்பெரிய மாஸ். பாடல்களும் காட்சிகளுடன் பார்க்கும்போது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 90-களில் நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற ஒளியமைப்பை வைத்து அந்த காலத்தோடு ஒன்ற வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ சிறப்பு இல்லை.
0 comments:
Post a Comment