ஜுன் 30 ரிலீஸ் படங்களுடன் 100ஐத் தாண்டும் 2017
27 ஜூன், 2017 - 14:55 IST
ஜுன் மாதத்தில் பொதுவாக அதிகமான படங்கள் வெளிவராது என்று சொல்வார்கள். கோடை விடுமுறையில் பல படங்களை வெளியிடுவதாலும், பள்ளிகள் திறக்கும் இந்த மாதத்தில் திரைப்படம் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை குறையும் என்பதாலும் அதிகமான படங்கள் வெளிவராது. ஆனால், இந்த வருடம் ஜுன் மாதத்தில்தான் அதிகப் படங்கள் வெளியாகி இந்த மாதத்தை முடிக்கும் என்று தெரிகிறது.
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான ஜுன் 2ம் தேதி 8 படங்கள் வெளிவந்தன. அதன் பின் 9ம் தேதி 2 படங்களும், 15ம் தேதி ஒரு படமும், 16ம் தேதி 4 படங்களும், 23ம் தேதி 3 படங்களும் வெளியாகின. அடுத்து வரும் வெள்ளிக்கிழமை ஜுன் 30ம் தேதி முதல் வாரத்தைப் போலவே மீண்டும் 8 படங்கள் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த 8 படங்களையும் சேர்த்தால் ஜுன் மாதப் படங்களின் பட்டியலில் 26 படங்கள் சேரும். இதற்கு முன் மார்ச் மாதத்தில் 25 படங்கள் வெளியாகியுள்ளது.
இவன் தந்திரன், நெஞ்சம் மறப்பதில்லை, எவனவன், எங்கேயும் நான் இருப்பேன், இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன், அதாகப்பட்டது மகா ஜனங்களே, காதல் காலம் ஆகிய 8 படங்கள் வரும் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல கடைசி நேரத்தில் இதில் சில படங்கள் வெளியாகாமல் போகுமா அல்லது 8 படங்களும் வந்துவிடுமா என்பது 30ம் தேதி காலையில்தான் தெரிய வரும்.
ஜுன் 30ம் தேதி வெளிவரும் படங்களின் எண்ணிக்கையும் சேர்த்தால் இந்த 2017ம் வருடத்தில் முதல் 6 மாதங்களில் வெளியாகியுள்ள படங்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிடும்.
0 comments:
Post a Comment