“அரசு அலுவலகங்களில் லஞ்ச பட்டியல் வையுங்கள்” : மலையாள நடிகர் சாடல்...!
25 ஜூன், 2017 - 16:02 IST
சமீபத்தில் கேரளாவில் செம்பாநாடு பகுதியை சேர்ந்த விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மலையாள குணச்சித்திர நடிகர் ஜாய் மேத்யூ, அரசு அலுவலகங்களிலேயே லஞ்சம் தலைவிரித்து ஆடுவதில் முதல் இடம் வருமான நிதி துறைக்குத்தான் என்றும், ஒருவரை எந்த அளவுக்கும் லஞ்சம் கொடுக்க தூண்டவோ அல்லது அது முடியாத பட்சத்தில் ஒருவர் தன் வாழ்க்கையையே முடித்துக்கொள்ள வைக்கவோ அவர்களால் தான் முடியும் என காட்டமாக சாடியுள்ளார்..
மலையாளத்தில் ஷட்டர் என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவரும் தமிழில் தேவி, பலூன் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பவரும் தான் இந்த ஜாய் மேத்யூ. மேலும் இதுபற்றி கூறியுள்ள அவர், “இப்படிப்பட்ட நபர்கள் சிக்கிக்கொண்டால் கூட உடனே அரசியல்வாதிகளும் தொழிற்சங்கத்தினரும் வரிந்துகட்டிக்கொண்டு வக்காலத்து வாங்க வந்து விடுகின்றனர். எந்த சங்கமும் லஞ்ச அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என சொல்வதில்லை. பேசாமல் டீக்கடையில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது போல அரசு அலுவலகங்களிலும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டும் என பட்டியல் எழுதி ஒட்டிவிட்டால் புண்ணியமாக போகும்.. மக்களும் அதற்கு பழகி தொலைப்பார்கள்” என்றும் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment