ஜீவிதா வீட்டில் ரூ.7 கோடி செல்லாத நோட்டுகள்: போலீஸ் சோதனையில் சிக்கியது
24 ஜூன், 2017 - 10:28 IST
பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகரின் மனைவி ஜீவிதா. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜீவிதா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஐதராபாத்தில் உள்ள பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். டாக்டர் ராஜசேகர் தற்போது கருடவேகா என்ற படத்தில் நடிக்கிறார். இதனை ஜீவிதா தயாரிக்கிறார்.
இந்த நிலையில் நேற்று ஜீவிதா வீட்டில் பஞ்ஜாரா ஹில்ஸ் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஜீவிதா வீட்டில் ஏராளமான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது ஜீவிதாவின் மேலாளர் ஸ்ரீனிவாஸ் என்பவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டதில் அதில் 7 கோடி மதிப்பிலான சமீபத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீனிவாஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஜீவிதா கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீநிவாஸ் நாங்கள் தயாரிக்கும் கருடவேகா படத்தின் தயாரிப்பு நிர்வாகி. இதுபோன்று பல படங்களுக்கு அவர் தயாரிப்பு நிர்வாகியாக இருக்கிறார். இது தவிர அவருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதால் அந்த பணம் எங்கள் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது வருத்தமாக இருக்கிறது. என்றார்.
0 comments:
Post a Comment