கார்களில் முன்னணியில் இருக்கும் சிவப்பு கலர் காரான லைட்னிங் மெக்குயின், கார் பந்தயத்தில் தொடர்ந்து முதல் இடத்தையே பிடிக்கிறது. லைட்னிங்கின் நெருங்கிய நண்பர்களான பாபி ஸ்விப்ட் மற்றும் கேல் வெதர்ஸ் ஆகிய இரு கார்களும் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்து வருகிறது.
இவ்வாறாக வெற்றிப் பாதையில் சென்ற இந்த கார்களின் வெற்றிக்கு தடை போடும்படியாக ஒரு சம்பவம் நடக்கிறது. அதாவது அடுத்ததாக நடக்கும் கார் பந்தையப் போட்டியில் லைட்னிங், வெற்றி கோட்டை தொடும் சமயத்தில் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஜாக்சன் ஸ்டார்ம் என்ற கருப்பு நிறக் கார் கண்ணிமைக்கும் நேரத்தில் லைட்னிங்கை முந்தி வெற்றிக் கோட்டை தொட்டுவிடுகிறது.
இதையடுத்து, ஸ்டார்ம் மீது அனைவரின் கவனமும் திரும்ப, பழைய கார்கள் ஓரம் கட்டப்படுகிறது. நவீன தொழில்நுட்பம், புதுமையான ஸ்டைல் என அனைத்திலும் புதுமையை பார்த்த உடன், அனைவரும் லைட்னிங் மற்றும் அதன் நண்பர்களை ஓய்வுபெற சொல்லி வற்புறுத்த பாபி மற்றும் கேல் உள்ளிட்ட பல கார்கள் ஓய்வு அறிவிப்பை வெளியிடுகிறது.
பந்தையத்தில் தான் வென்றே தீருவேன் என்ற முடிவுடன் இருக்கும் லைட்னிங், ஓய்வு பெறாமல் அடுத்த பந்தயத்தில் பங்கேற்கிறது. லைட்னிங்கை தவிர்த்து மற்ற பழைய கார்கள் அனைத்தும் ஓய்வு பெற்றதால், லைட்னிங் புதிய தொழில்நுட்பம் கொண்ட கார்களுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
பந்தையத்தில் அந்த கார்களுக்கு ஈடுகொடுக்க போராடிய லைட்னிங், ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிவிடுகிறது.
இதையடுத்து, லைட்னிங்கின் கதை அவ்வுளவு தான் என்று பலரும் வசைபாடி வருகிறார்கள். இந்நிலையில் லைட்னிங் மீண்டும் புத்துயிர் பெற ஸ்பான்சர் ஒருவர் முன்வருகிறார். அவரது உதவியுடன் பழைய நிலைக்கு திரும்பிய லைட்னிங்கை விளம்பரப்படுத்தி, அவரிடம் உள்ள மற்ற கார்களை விற்பனை செய்ய அந்த ஸ்பான்சர் முடிவு செய்கிறார்.
ஆனால் அவரது முடிவை ஏற்க மறுக்கும் லைட்னிங், கார் பந்தையப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. தோல்வியடைந்தால், அவரது பேச்சை கேட்பதாக கூறி வாழ்வா சாவா போட்டிக்கு தயாராகிறது.
லைட்னிங்கின் கோச்சான க்ரூஸ் ரேமியர்ஸ் சில நுணுக்கங்களை தெரிவித்து போட்டிக்கு தயார்படுத்துகிறது.
கடைசியில் நாம் எதிர்பார்த்த அந்த போட்டி வர, அதில் பங்கேற்கும் லைட்னிங் எப்படி வெற்றி பெற்றது? வெற்றி பெற என்ன செய்தது? அதன் என்ன முயற்சிகளை மேற்கொண்டது? அனைவரையும் மீண்டும் எப்படி கவர்ந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆங்கிலத்தில் ஓவன் வில்சன், கிறிஸ்டெலா அலோன்சா, கிறிஸ் கூப்பர், ஆர்மி ஹேமர் என கார்களுக்கு குரல் கொடுத்த அனைவரும் நக்கலுடன் பேசியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. தமிழ் டப்பிங்கில் வசனங்கள் ரசிக்கும்படி நகைச்சுவையாக இருக்கிறது.
கார்ஸ் படங்களின் சீரியஸை இயக்கியுள்ள பிரெயின் ஃபீ, கார்ஸ் 3 படத்தை முந்தைய பாகங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இயக்கி இருக்கிறார். கார்ஸ் 1, கார்ஸ் 2 வரிசையில் கார்ஸ் 3 படமும் ரசித்து பார்க்கும்படி ட்விஸ்ட்டுகளுடன் இருக்கிறது.
கேமரா காட்சிகளில் ஜெரமி லஸ்க்கி, கிம் வொயிட் திறம்பட செயல்பட்டிருக்கின்றனர். பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோஸின் பங்களிப்பு அளப்பறியாதது. ஒவ்வொரு காட்கிக்கும் மெனக்கிட்டிருக்கின்றனர். படத்தை 3டி-யில் பார்க்க பிரம்மாண்டாக இருக்கிறது. ராண்டி நியூமேனின் பின்னணி இசை காட்சிக்கு துணையாக ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `கார்ஸ் 3′ ரேஸ் வின்னர்.
0 comments:
Post a Comment