நடிகர் சிவகுமார் தனது 75வது பிறந்தநாளை 27 அக்டோபர் 2016 அன்று கொண்டாடினார். அனைத்து தரப்பு பிரபலங்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
ரஜினிகாந்த், கடந்த 12ம்தேதி அன்று சிவகுமாருக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியிடப்பட்டது. மனம்திறந்து சிவகுமாரைப் பாராட்டிய ரஜினி, ‘சிவகுமார் சொல்வதைக் கேட்டால் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
‘மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்களுடன் நான் நடித்த படங்கள் இரண்டுதான். ஒன்று ‘புவனா ஒரு கேள்விக்குறி’, மற்றொன்று ‘கவிக்குயில்’. அவருடன் பழகியதிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த கணத்தில் நான் மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக இருந்த நேரம். மதிப்பிற்குரிய சிவக்குமார் அவர்கள் சலிக்காமல் ஒவ்வொரு நாளும் ‘இந்த பழக்கங்களை எல்லாம் விட்டுவிடு ரஜினி, நீ பெரிய நடிகனாக வருவே, இந்த கெட்டப் பழக்கங்களால உன்னோட உடம்பை கெடுத்துக்காத’ எப்படின்னு சொல்லிகிட்டே இருப்பாரு. என்னடா இந்த ஆள் நம்மள நிம்மதியா விடமாட்டேங்கறாரே என்று எனக்கே சில நேரங்களில் சலிப்பாயிருக்கும்.
என் மேலே அவருக்கு அந்த அளவுக்கு அன்பு, பாசம், நம்பிக்கை. அவர் நல்ல மனிதர். நல்ல உள்ளம் கொண்டவர். ஒழுக்கமானவர், நேர்மையானவர், ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர். இதுபோன்ற மனிதர்கள் சொல்லுவதெல்லாம் பலிக்காமல் இருக்காது; அவர் சொன்னது பலித்தது. நான் பெரிய நடிகனும் ஆனேன். அவர் பேச்சைக் கேட்காததினால் என்னுடைய உடம்பையும் கெடுத்துக்கொண்டேன்.
இன்னைக்கும் அவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை. அவர் சொல்கிறபடி நடந்துகிட்டா ஆரோக்யமாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம். இந்த மாபெரும் கலைஞன், மனிதன் நீடூழி வாழ்கவென்று ஆண்டவனை வேண்டி இந்த அவருடைய 75-வது பிறந்தநாளில் நான் மனதார வாழ்த்துகிறேன்.
-அன்புடன்
ரஜினிகாந்த்
0 comments:
Post a Comment