கோவையில் கல்லூரியில் படிக்கும் இனியா தனது தோழிகளுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை எடுக்கிறார். இது கல்லூரி பேராசிரியருக்கு பிடிக்காததால், யாருமே யோசிக்காத வகையில் ஒரு கதையை தயார் செய்துவருமாறு கூறுகிறார். இதனால், வேறு ஒரு கதையை யோசிக்கும் இனியா, அதை படமாக்குவதற்காக தோழிகளுடன் மலைப் பங்களாவுக்கு பயணமாகிறார்.
இவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. முன்பின் அறியாத அவளுக்கு உதவி செய்வதாக கூறி அவளையும் தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மலைப் பங்களாவுக்கு செல்கிறார்கள்.
அங்கு தனது தோழிகளை வைத்து குறும்படத்தை படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இனியாவின் தோழி ஒருத்திக்கு அடிபட்டு விடுகிறது. இதனால், அவளுக்கு பதிலாக ஈடனை நடிக்குமாறு இனியா அழைக்கிறார்.
முதலில் மறுக்கும் ஈடன் பின்னர் நடித்து கொடுத்து விட்டு அந்த பங்களாவை விட்டு செல்கிறார். இந்நிலையில், இனியாவின் தோழிக்கு ஈடன் இறந்துவிட்டதாக பேப்பர் செய்தி ஒன்று கிடைக்கிறது.
இதனை பார்த்து இனியாவும் அவளது தோழிகளும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர், அவர்கள் எடுத்த குறும்படத்தின் வீடியோ பார்க்கிறார்கள். அதில், மற்றவர்களின் உருவம் எல்லாம் தெரிய, ஈடனின் உருவம் மட்டும் அதில் தெரியவில்லை.
இதையடுத்து, இனியாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கும் அவளது தோழிகள் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள்.
டாக்டர் இனியாவுக்கு ஒன்றும் இல்லை என்று கூற மேலும் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள போலீஸ் அதிகாரியான நதியாவிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார்கள்.
இறுதியில் ஈடன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா? இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம்? இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நதியாவின் நடிப்பு அபாரம். இன்னும் அதே இளமையோடு நடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
இனியாவின் நடிப்பு இப்படத்தில் பேசும்படியாக அமைந்துள்ளது. துறுதுறுவென இருக்கும் பெண்ணாகவும், ஈடனின் ஆவி உள்ளே புகுந்த பின்பு வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஈடன், ஆர்த்தி மற்றும் தோழிகளாக வருபவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். ஒரு ஆண்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. பெண்களை மட்டுமே வைத்து படம் இயக்கிய இயக்குனர் துளசிதாஸுக்கு பெரிய பாராட்டுக்கள். பல இடங்களில் பெண்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார்.
ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஸ்ரீகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சஞ்சிவ் சங்கரின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘திரைக்கு வராத கதை’ சுவாரஸ்யம் குறைவு
0 comments:
Post a Comment