காதலில் நம்பிக்கை தான் முக்கியம் - காஜலின் தீபாவளி சிறப்பு பேட்டி!
28 அக்,2016 - 15:45 IST
இவர் கண்கள் பேசும், படங்கள் பேசும், பார்த்த ரசிகர்கள் பேசும், காஜல் பற்றி இங்கே நாம் பேசுவோம்...
* கவலை வேண்டாம் படம் பற்றி.?
டிகே இயக்கத்தில் ஜீவா, நான், பாபி சிம்ஹா நடித்திருக்கிறோம். படத்தில் என் பெயர் திவ்யா, நல்ல தைரியமான பெண், இந்த ரோலில் நடிக்க நிறைய காரணம் உள்ளது. காதல் இருக்கு, த்ரில்லர் எல்லாமே இருக்கு. என்னை சுற்றியே படத்தின் கதை நகரும், ஷூட்டிங் செம ஜாலியாக இருந்தது. அதைப்போல் படமும் ஜாலியாக இருக்கும்.
* எப்படி படங்களில் நடிக்க தேர்வு செய்கிறீர்கள்.?
ஒரு படத்தின் கதையை கேட்கணும், எனக்கு பிடிக்கணும், என்னோட ரோல் என்னை பாதிக்கணும், இதில் ரொம்ப தெளிவாக இருக்கணும், முதலில் எனக்கு கதை தான் முக்கியம். அடுத்த தான் இயக்குநர், ஹீரோ எல்லாம்.
* நீங்கள் பெரும்பாலும் புது இயக்குநர்கள் படங்களில் நடிப்பதில்லை ஏன்?
என்னை இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை, அப்படியே என்னை தொடர்பு கொண்டு, புது இயக்குநர்கள் சொன்ன கதை பிடித்திருந்தால் கண்டிப்பாக ஒத்துக் கொள்வேன். நான் ரெடியாக உள்ளேன்.
* சித்ராதேவியை மறக்க முடியாது, இன்னும் பாட்டு பயிற்சி எல்லாம்.?
அய்யோ சும்மா அதெல்லாம் ஒரு ஜாலிக்காகதான் அந்த சித்ராதேவி கேரக்டர், நிஜமாக என்னால் பாட முடியாது. சக்கரவியூகம் படத்தில் பாடியிருக்கிறேன். தமிழில் என்னை யாரும் பாட அழைக்கவில்லை.
* யாருடன் நடிக்கும் போது மிகவும் நட்பாக உணருவீர்கள்.?
நான் நடிக்கும் பெரும்பாலனோர் என்னுடன் இரண்டு - மூன்று படங்களில் சேர்ந்தே நடித்து உள்ளனர். விஜய், கார்த்தி, என்.டி.ஆர், ராம்சரண் இப்படி பலருடன் சேர்ந்து நடித்துள்ளேன் எனக்கு யாருடன் ஈகோ பிரச்னை வந்ததில்லை.
* சூர்யா, கார்த்தி உடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க.?
ரெண்டு பேரும் ரொம்ப தொழில் முறை நடிகர்கள், தெளிவா இருப்பாங்க, சின்சியரா செட்ல இருப்பாங்க, கார்த்தியுடன் சில விளம்பரப்படங்கள் கூட நடித்திருக்கிறேன், ரெண்டு பேரும் நட்போட பழகுவார்கள்.
* தமிழ், தெலுங்கு எந்த மொழியில் அதிகமான படங்கள் வாய்ப்பு வருகிறது ?
ரெண்டு மொழிகளிலும் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கிறது. நல்ல கதை அமைகிறது, எனக்கு பிடித்த கதையை மட்டும் ஒத்துக் கொள்கிறேன்.
* உங்களுக்கு பிடித்த 5 படங்கள் பற்றி சொல்லுங்க.?
துப்பாக்கி, அழகுராஜா, மிஸ்டர் பெர்பெக்ட்(தெலுங்கு), பாட்ஷா(தெலுங்கு), சாரு சாரு (தெலுங்கு)
* உங்களுக்கு சினிமா துறையில் நட்பு வட்டாரம் இருக்கா.?
நெருக்கமான நட்பு ஏதும் இல்லை. பள்ளி, கல்லூரி நண்பர்கள் தான் அதிகம். அவர்களையும் எப்போதாவது பார்ப்பேன், பார்க்கும் போது பேசிக்கொள்வோம். மற்றபடி போன் பேசுவது, மெஸேஜ் அனுப்புவது என்றெல்லாம் நட்பு வைத்து கொள்ள மாட்டேன்.
* தமிழ், தெலுங்கு ரசிகர்கள் பற்றி.?
ரெண்டு பேரும் என்னை கொண்டாடுறாங்க, நன்றாக ஊக்கப்படுத்துவார்கள். என்னால் முடிந்தவரை சோஷியல் மீடியாவில் அவர்களோடு பேசிக் கொள்கிறேன். அவர்களுக்கு பிடித்த படங்களை கொடுக்க விரும்புகிறேன். இதைப்போன்று ரசிகர்கள் கிடைத்ததை வரமாக நினைக்கிறேன்.
* மனதில் நிற்கும் மகதீரா படம் பற்றி
நிச்சயமாக மனதை விட்டு நீங்காத படம் வாழ்க்கையில் ஒரு முறை தான் இந்த மாதிரி படம் கிடைக்கும், என் வாழ்க்கையை மாற்றிய படம் மகதீரா என்று கூட சொல்லலாம். இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடித்தது பெரிய அனுபவம். ஒரு வருஷம் இந்த படத்துக்காக உழைத்தோம். நான் புதிதாத வந்த சமையம், என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் கொடுத்த இயக்குநருக்கு தான் நன்றி சொல்லணும்.
* வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?
வெற்றி கிடைத்தாலும், தோல்வி வந்தாலும் ஒரே நிலையில் தான் இருப்பேன். ஒவ்வொரு படத்துக்கும் கடின உழைப்பை தருகிறேன். மக்கள் விரும்பினார்கள் என்றால் படம் ஒடும். விரும்பாவிட்டால் படம் ஒடாது. அப்போதே நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். சினிமா ரிஸ்க்கு தான். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருக்கிறேன், அது, வெற்றி வந்தால் தலையில் வைத்து கொண்டாடுவதும், தோல்வி வந்தால் துவண்டு போகவும் கூடாது.
* எல்லாரும் உங்க கண்களை பாராட்டும்போது உங்கள் மனநிலை.?
எனக்கும் பெருமையாகத்தான் உள்ளது. என் கண்களைப் பற்றி பேசுகிற எல்லாருக்கும் நன்றியை சொல்கிறேன்.
* இந்த வருடம் தீபாவளி?
இந்த வருடம் தீபாவளியை என் குடும்பத்தோட மும்பையில் தான் கொண்டாட போகிறேன். புது டிரஸ், ரசகுல்லா மாதிரியான ஸ்வீட்ஸ் என... தீபாவளிக்கு ஒரு பெரிய கொண்டாட்டமே இருக்கும்.
* லவ் பற்றி.?
இரண்டு பேருக்கும் வந்தால் தான் அது லவ். அதில் நம்பிகை ரொம்ப முக்கியம், ஒருவரை ஒருவர் நம்பிக்கையுடனும், நட்புடனும் பழகுதல் அவசியம்.
* ஒய்வு நேரங்களில்.?
நன்றாக சமைப்பேன், புத்தகங்கள் படிப்பேன், பயணம் செல்வது பிடிக்கும், படங்கள் பார்ப்பேன், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுவேன்.
0 comments:
Post a Comment