நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவின்போது சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா கூறியதாவது:-
என் தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தில் அவர் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக நடத்தினோம். அதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஏராளமானோர் இந்த கண்காட்சியை கண்டுகளித்தனர். எனது தந்தை பெயரில் வருடந்தோறும் ஓவியப்போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு சிறந்த ஓவியருக்கான விருதுகள் வழங்க திட்டமிட்டு உள்ளோம்.
என் தந்தை ஒழுக்கமாக வாழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையை நாங்களும் கடைப்பிடித்து வாழ ஆசைப்படுகிறோம். வெளிநாடுகளுக்கு செல்லும்போது இளைய தலைமுறையினர் உங்கள் தந்தை தான் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.
அவரின் அறிவுரைகளை பின்பற்றியே எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம் என்று சொல்கின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. எனது தந்தை ராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவுகள் நடத்தி உள்ளார். அடுத்து திருக்குறள் பற்றி பேசவும் தயாராகி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment