டிரை பார்க்கர் சிறுவயதிலிருந்து டிவி சீரியல்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனால், இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவருடைய உருவத்தில் பொம்மைகள் எல்லாம் வெளியாகி அனைவர் மத்தியிலும் பிரபலமாகிவிடுகிறார். ஒருகட்டத்தில் இவருடைய சீரியல் நிறுத்தப்பட இவரது மார்க்கெட் சட்டென்று சறுக்குகிறது.
இதனால், விரக்தியடையும் டிரை பார்க்கர் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாகிறார். ஒருமுறை கப்பலில் இருக்கும் வைரத்தை திருடுவதற்கு டிரை பார்க்கர் செல்கிறார். அதை கண்டுபிடித்து அவரை பிடிக்கும் முயற்சியில் உளவுத்துறை ஏஜென்டான க்ரூவும் அவரது மனைவியும் செல்கிறார்கள். சென்ற இடத்தில் வைரத்தை அவனிடமிருந்து மீட்டுவிடுகிறார்கள். ஆனால், டிரை பார்க்கர் இவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார்.
இதனால் க்ருவையும் அவரது மனைவியையும் உளவுத்துறை ஏஜென்ட் பதவியிலிருந்து அவரை தூக்குகிறார்கள். இந்நிலையில், க்ரூ இரட்டை பிறவி என்றும், அவருக்கு ஒரு சகோதரர் இருப்பதும் தெரிய வருகிறது. எனவே, தனது சகோதரரை தேடி புறப்படுகிறார் க்ரூ.
பெரிய செல்வந்தரான க்ரூவின் சகோதரர், ஏகப்பட்ட செல்வங்கள் இருந்தும் தன்னுடைய அப்பாவைப் போல் பெரிய வில்லனாக ஆகமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறார். இதனால், ஏற்கெனவே வில்லனாக இருந்து மிகப்பெரிய சாகசங்கள் செய்த க்ரூவிடம் தானும் அதேபோல் வில்லனாக ஆகவேண்டுமென்று உதவி கேட்கிறார்.
ஆரம்பத்தில் மறுக்கும் க்ரூ, ஒருகட்டத்தில் தனது சகோதரனின் ஆசையை நிறைவேற்ற முன்வருகிறார். இதற்குள், க்ரூவால் கைப்பற்றப்பட்ட வைரத்தை டிரை பார்க்கர் மறுபடியும் திருடி சென்றுவிடுகிறார். இதை அறிந்த க்ரூ, அந்த வைரத்தை திருடி, தனது சகோதரனை வில்லனாக்குவதற்காக பயிற்சி கொடுக்க முடிவெடுக்கிறார். இதற்காக பல திட்டங்கள் போட்டு அந்த வைரத்தை இரண்டு பேரும் சேர்ந்து திருட முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில், அந்த வைரம் இவர்கள் கைக்கு கிடைத்ததா? தன்னைப் போலவே தனது தம்பியையும் பெரிய வில்லனாக க்ரூ மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
டெஸ்பிகபில் மீ பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவந்துள்ள படம்தான். முந்தைய பாகங்களைப்போலவே இந்த பாகமும் ரொம்பவும் கலகலப்பாக செல்கிறது. முக்கியமாக டிரை பார்க்கர் கப்பலில் வைரத்தை திருடச் செல்லும்போது அவர் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் ரொம்பவும் கலகலப்பாக இருக்கிறது.
அதேபோல், இந்த பாகத்தில் க்ரூவின் சகோதரர் செய்யும் குறும்புகளும் ரசிக்க வைக்கிறது. இவர் சீரியசாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாக இருக்கிறது. மின்னியன்ஸ்களுக்கு ஆரம்பத்தில் அவ்வளவாக வேலை இல்லாவிட்டாலும் பிற்பாதிக்கு பிறகு அவைகளின் சேட்டைகள் எல்லாம் கலகலப்பூட்டியிருக்கின்றன.
படம் முழுவதும் காமெடி மழை பொழிந்திருந்தாலும் ஆங்காங்கே செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கிறது. அவை கதை ஓட்டத்திற்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை. எல்லா கதாபாத்திரங்களையும் ரொம்பவும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘டெஸ்பிகபில் மீ 3’ நகைச்சுவை விருந்து.
0 comments:
Post a Comment