உதவி இயக்குனரை குழப்பிய ரஜினியின் பாராட்டு..!
20 ஜூன், 2017 - 14:20 IST
ஷங்கரிடம் உதவி இயக்குனாராக இருப்பவர் முரளி மனோகர்.. மிகவும் துடிப்பான இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷங்கரின் கட்டளைகளை சிரமேற்று பம்பரமாக சுழலுவார். இதனாலேயே இவர்மீது ரஜினியின் ஸ்பெஷல் கவனம் திரும்பியதில் வியப்பேதும் இல்லை. ரஜினி டப்பிங் பேசும்போது அவருக்கு உதவியாக வசனங்களை எடுத்துக் கொடுக்கும் வேலையை செய்வதும் இந்த முரளி மனோகர் தான். இவர் 'கர்ண மோட்சம்' என்கிற குறும்படத்தையும் இயக்கியுள்ளார்..
ஒருநாள் டப்பிங் போய்க்கொண்டு இருந்தபோது ப்ரீயாக இருந்த சமயத்தில், “முரளி எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க.. ஸ்க்ரிப்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்களா..?” என்ற கேள்வி ரஜினியிடம் இருந்து வந்தது.. இதை சற்றும் எதிர்பார்க்காத முரளி மனோகர் “சீக்கிரம் சார்” என தன்னையுமறியாமல் சொல்லி வைத்தார். “நல்லாப் பண்ணுங்க... என கூறிய ரஜினி, சில நொடிகள் தன் தாடியைத்தடவி யோசித்துவிட்டு, “அவசரப் படாதீங்க... உங்க படம் (கர்ண மோட்சம்) நீங்க யாருன்னு சொல்லிருச்சு... ப்பா... இன்னும் அதோட தாக்கம் என்னை விட்டுப் போகலீங்க... சீக்கிரம் பண்ணுங்க” என கூறியுள்ளார்.
ரஜினியின் பாராட்டை கேட்டு முரளி மனோகர் சந்தோஷப்பட்டாலும் கூட, ரஜினி அவசரப்படாதீங்கன்னு சொன்னதைக் கேட்கிறதா, இல்லை சீக்கிரம் பண்ணுங்கன்னு சொன்னதை எடுத்துக்கொள்வதா என ஒருகணம் திகைத்து நின்றாராம். இருந்தாலும் அவர் பேச்சில் இருந்த ஒரு அக்கறையை மட்டும் உணர்ந்து சிலிர்த்தேன் என்கிறார் முரளி மனோகர்.
0 comments:
Post a Comment