சஞ்சய் தத்தை முன்னதாகவே விடுவித்தது ஏன்: கோர்ட் கேள்வி
13 ஜூன், 2017 - 11:02 IST
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை, தண்டனை காலத்துக்கு முன்னதாகவே விடுதலை செய்தது ஏன்? என, மஹாராஷ்டிர அரசுக்கு, மும்பை ஐகோர்ட், கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான ஒரு வழக்கில், ஆயுதம் வைத்திருந்ததாக, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மும்பை தடா கோர்ட், ஆறு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்திருந்தது. இந்த வழக்கில் அவருக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.
வழக்கின் விசாரணையின்போது, சஞ்சய் தத், 18 மாதங்கள் சிறையில் இருந்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து, 2013ல் அவர் சரணடைந்தார். புனேயில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த போது, மொத்தம், 120 நாட்கள், பரோலில் இருந்தார். தண்டனை முடிய, எட்டு மாதங்கள் இருந்த நிலையில், நன்னடத்தை காரணமாக, 2016, பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து, புனேயைச் சேர்ந்த ஒருவர், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரணைக்கு ஏற்ற கோர்ட், நேற்று பிறப்பித்த உத்தரவில் எழுப்பியுள்ள கேள்விகள்:
சஞ்சய் தத்துக்கு பரோல் வழங்கியது, முன்னதாகவே விடுதலை செய்தது போன்ற முடிவுகளை எடுத்தது யார்? அவருக்கு அடிக்கடி பரோல் கொடுத்தது ஏன்? அவருக்கு சலுகை காட்டியதற்கான காரணம் என்ன? சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யின் ஆலோசனை பெறப்பட்டதா அல்லது சிறை கண்காணிப்பாளர், கவர்னருக்கு நேரடியாக பரிந்துரை செய்தாரா? அவரது நன்னடத்தை குறித்து சான்று அளித்தது யார்; எப்போது அவரது நன்னடத்தை குறித்து ஆய்வு செய்தீர்கள்... அவர்
பரோலில் இருந்த போதா? இவ்வாறு சரமாரி கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட், இது குறித்து, ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment