நடிப்பிலிருந்து ஓய்வு, இளம் ஹீரோ தந்த அதிர்ச்சி
14 ஜூன், 2017 - 11:51 IST
ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோக்களில் ஒருவரும் ஆன மோகன்பாபுவின் இரண்டு மகன்கள் விஷ்ணு, மனோஜ் இருவருமே தெலுங்கில் பல படங்களில் நாயகர்களாக நடித்து வருகிறார்கள். இவர்களுடைய அக்கா லட்சுமி மஞ்சுவும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மனோஜ், தற்போது விடுதலைப் புலிகளை மையப்படுத்திய படமான 'ஒக்கடு மிகிலாடு' என்ற படத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது. இதனிடையே, இந்தப் படம்தான் நடிகரான தன்னுடைய கடைசிப் படம் என இன்று காலையில் டிவிட்டரில் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை மனோஜ் வெளியிட்டிருக்கிறார்.
தெலுங்குத் திரையுலகில் உள்ளவர்கள் இது குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். சுமார் 34 வயதே ஆன மனோஜ் பல தெலுங்குப் படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் பெரிய அளவில் வெற்றிகளைக் குவித்ததில்லை. அதன் காரணமாகத்தான் அவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவித்திருக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
நடிப்பைத் தவிர்த்து அவர் அடுத்து இயக்கத்தில் ஈடுபடுவாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஒரு வேளை 'ஒக்கடு மிகிலாடு' படம் வெற்றி பெற்றால் அவர் நடிப்பைத் தொடுவாரா என்பது பின்னர் தெரிய வரும்.
0 comments:
Post a Comment