பாவனா வழக்கில் திருப்பம்...: திலீப், காவ்யா மாதவன் கைதாகிறார்கள்?
04 ஜூலை, 2017 - 10:51 IST
மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக கடத்தலுக்கு தூண்டுகோலாகவும், மாஸ்டர் மைண்டாகவும் இருந்தது மலையாள முன்னணி நடிகர் திலீப் என்பதும், இதற்கு உதவியவர் அவரது இரண்டாவது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி போலீசார் திலீபிடம் 12 மணி நேரம் ரகசிய விசாரணை நடத்தினார்கள். காவ்யா மாதவனின் ஆன் லைன் விற்பனை நிலையத்தில் சோதனை நடத்தினார்கள். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சோதனைகளில் கடத்தல் சம்பவத்துக்கான வலுவான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
திலீப்பின் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்களில் பல்சர் சுனில் காணப்படுகிறார். பாவனா கடத்தப்படுவதற்கு முன்பு பல்சர் சுனில், திலீபின் மேலாளருடன் பலமுறை தொலைபேசியில் பேசி உள்ளார் என்று கூறப்படுகிறது. பல்சர் சுனீல், திலீபிடம் பணம் கேட்டு கடிதம் மூலம் மிரட்டி உள்ளார். பாவனாவை ஆபாச படம் எடுத்த மெம்மரி கார்டை காவ்யா மாதவனின் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் கொடுத்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வரும் துணை போலீஸ் சூப்பிரண்ட் தினேந்திர காஷ்யப்பை வழக்கு விசாரணை முடியும் வரை கொச்சியிலேயே தங்கியிருக்கும்படியும், தொடர்புடையவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கைது செய்யும் படியும் அவருக்கு டி.ஜி.பி லோக்நாத் பெகரா உத்தரவிட்டுள்ளார். இதனால் திலீப்பும், காவ்யா மாதவனும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் காவ்யா மாதவனும், அவரது தாயாரும் கொச்சியிலிருக்கும் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறினர். அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. கைதுக்கு பயந்து இருவரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment