தெலுங்கில் தடுமாறும் 'பிக் பாஸ்'
20 ஜூலை, 2017 - 14:33 IST
தமிழ்நாட்டில் கூட மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் டிவி நிகழ்ச்சியாக 'பிக் பாஸ்' மாறிவிட்டது. மக்கள் பேசினார்களோ இல்லையோ சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு, போராட்டம் ஆகியவற்றில் மற்றவர்களே பேச வைத்துவிட்டார்கள். மேலும், ஆரம்பத்திலேயே பரணி, கஞ்சா கருப்பு ஆகியோருக்கிடையே நடந்த சண்டையாலும், ஜுலியை மற்றவர்கள் வெறுத்து ஒதுக்கியதாலும் நிகழ்ச்சியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஓவியா போன்றவர்களின் ஈடுபாடும் மக்களைக் கவர்ந்து மக்களும் அப்படியே 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
தெலுங்கில் கடந்த ஞாயிறு அன்று ஆரம்பமான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி துவக்கத்திலேயே தடுமாற ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்கள் யாருமே சுவாரசியமாகப் பேசவோ, சண்டை போடவோ செய்யாததே இதற்குக் காரணம் என்கிறார்கள். மேலும், தமிழை விட அங்குள்ள போட்டியாளர்கள் மக்களுக்கு அதிகம் பரிச்சயிமல்லாதவர்கள் என்பதும் ஒரு காரணம். அதனால், புதிதாக சில போட்டியாளர்களை 'பிக் பாஸ்' வீட்டிற்குள் அனுப்பலாமா என யோசித்து வருகிறார்களாம்.
ஓரளவிற்காவது பிரபலமான நடிகைகள் அல்லது நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருவதாகக் கேள்வி. மக்களிடமும் நிகழ்ச்சிக்கு எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் இருப்பதால் எப்படி பரபரப்பைக் கூட்டுவது என்றும் நிகழ்ழ்ச்சிக் குழுவினர் ஆலோசித்து வருகிறார்களாம். விரைவில் தெலுங்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் 'பிக்' மாற்றங்கள் வரலாம்.
0 comments:
Post a Comment