ஒரே நாளில் பணத்தைச் சுற்றும் 2 படங்கள்
14 ஜூலை, 2017 - 15:02 IST
தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடுகளில் சில சமயங்களில் அபூர்வமாக சில விஷயங்கள் நடப்பதுண்டு. ஒரே மாதிரியான கதை கொண்ட படங்கள், தலைப்பில் தொடர்புடைய படங்கள் என சொல்லி வைத்தாற் போல் ஒரே நாளில் அப்படிப்பட்ட படங்கள் எப்போதாவது வெளிவரும்.
இன்று வெளிவரும் இரண்டு படங்களுக்கிடையில் இப்படி ஒரு ஆச்சரிய ஒற்றுமை உள்ளது. 'பண்டிகை, ரூபாய்' ஆகிய இரண்டு படங்களுமே யாரோ ஒருவரின் கோடிக்கணக்கான ரூபாயை வைத்துக் கொண்டு சுற்றும் சிலரின் கதை என்பதை மையமாக வைத்து வந்துள்ளது.
ஒரு தாதாவின் பணத்தை கிருஷ்ணா, சரவணன், பிளாக் பாண்டி ஆகியோர் கொள்ளையடித்து அதைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள்தான் 'பண்டிகை' படத்தின் கதை.
ஒரு பைனான்ஸ் கம்பெனியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் சந்திரன், கிஷோர் ரவிச்சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த் ஆகியோரிடம் கிடைக்க, அதை வைத்துக் கொண்டு அவர்கள் சுற்றுவதுதான் 'ரூபாய்' படத்தின் கதை.
இரண்டு கதைகளிலுமே சில கோடி பணம், அதிலும் அவர்கள் உழைத்து சம்பாதிக்காத பணம் அவர்களின் கைகளில் கிடைத்தால் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதையின் மையக் கரு.
இந்த இரண்டு படங்களிலும் மேலும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு படங்களிலும் 'கயல்' ஆனந்திதான் கதாநாயகி.
இரண்டு 'ரூபாய்' சம்பந்தப்பட்ட படங்களையும் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூபாய் கொடுத்து படம் பார்த்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment