ஓவியாவுக்காக உருவான திடீர் மன்றங்கள்
20 ஜூலை, 2017 - 12:30 IST
நடிகர்களுக்குத்தான் தமிழ்நாட்டில் ரசிகர் மன்றங்கள் அதிகமாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு த்ரிஷாவுக்காகவும் ரசிகர் மன்றங்கள் உருவானது. அதன்பின் அவை என்ன ஆனது என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக 'பிக் பாஸ்' புகழ் ஓவியாவுக்காக பல ரசிகர் மன்றங்கள் உருவாகியுள்ளன. ஆனால், அவை அனைத்துமே சமூக வலைத்தளங்களில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'ஓவியா ஆர்மி, ஓவியா ஆதரவுப் படை, ஓவியா புரட்சிப் படை' என விதவிதமான பெயர்களில் பல குரூப்புகளும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.
தினமும் நூற்றுக்கணக்கான மீம்ஸ்கள் ஓவியாவைப் பற்றி உருவாகி வருகின்றன. சிலர் அதுக்கும் மேலே போய் அவருக்காக வீடியோ பாடல்களை வேறு உருவாக்கி வருகிறார்கள். நிகழ்ச்சியிலிருந்து சில வீடியோக்களை எடுத்து ஓவியா போல வருமா என புகழ் பாடி வருகிறார்கள். அது மட்டுமல்ல ஓவியாவுக்காக ஓட்டு போடுங்கள் என ஆதரவு கேட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் பதவிட்டு அதிர்ச்சியை வேறு ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஓவியா இதுவரை நடித்த படங்களிலேயே அவர் அறிமுகமான 'களவாணி' படம் மட்டும்தான் வெற்றிகரமாக ஓடிய படம். அதன் பின் பல சுமாரான படங்களில் மட்டுமே அவர் நடித்தார். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ரசிகர்கள், இந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியாவின் அணுகுமுறையை மட்டுமே ரசித்து அவருக்கு இப்படி ஒரு ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள்.
ஓவியா கடைசியில் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, அவர் எதிர்பார்த்ததையும் மீறி ரசிகர்கள் மத்தியில் அவருக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டார் என்பது மட்டும் நிச்சயம்.
0 comments:
Post a Comment