Saturday, July 15, 2017

போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய முன்னணி நடிகர் – நடிகைகளுக்கு நோட்டீஸ்

தெலுங்கு பட உலகில் போதை பொருட்கள் புழக்கம் கணிசமாக இருப்பதாக புகார்கள் வந்தன. நடிகர்-நடிகைகள் பலருக்கு போதை பழக்கம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சிகரெட், ஊசி, சுவாசித்தல் போன்றவற்றின் மூலமாக ‘கொக்கைன்’ உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின் என்ற போதை பொருள் கடத்தல்காரரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் ஐதராபாத்துக்கு போதை பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர்-நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பியூஸை கைது செய்து அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் போதைபொருள் சப்ளை செய்யப்பட்ட நடிகர்-நடிகைகள் உள்பட 12 பேரை பற்றிய விவரங்கள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் பெயர்களை போலீசார் வெளியிடவில்லை.

ஆனாலும் அதில் நடிகர்கள் நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், டைரக்டர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு, கலை இயக்குனர் சின்னா உள்பட திரைப்படத்துறையைச் சேர்ந்த 12 பெயர்கள் இருப்பதாக தெலுங்கு டெலிவிஷன் சேனல்கள் நேற்று படத்துடன் செய்தி வெளியிட்டன.

இந்த 12 பேருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 19-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

விசாரணைக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்பது தெரியவரும். தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலுங்கு பட உலகில் போதை பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்பட வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தில் இருக்கும் நடிகர்-நடிகைகள் அதில் இருந்து மீள வேண்டும். குற்றம் செய்தவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகர் நவ்தீப் கூறும்போது, “எனக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. நான் நேரில் எனது விளக்கத்தை அளிப்பேன். எனக்கு போதைப் பழக்கம் கிடையாது. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பும் இல்லை. நான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிப்பேன்” என்றார்.

0 comments:

Post a Comment